டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் – சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அரசியல்வாதி
20 Nov,2025
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக சட்டமன்றத்தில் அரசியல்வாதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த காரை ஒட்டி வந்த மருத்துவர் உமர் முகமது, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இதில் தொடர்புடைய ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் அதன் சேர்மன் கைது செய்யபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில் அதன் முன்னாள் பிரதமராக கருதப்படும் சவுத்ரி அன்வாருல் ஹக் என்பவர் பேசியுள்ளார்.
காஷ்மீர் வரை தாக்குவோம்
சட்டமன்றத்தில் பேசிய அவர், “நீங்கள் (இந்தியா) பலுசிஸ்தானில் இருந்து இரத்தம் சிந்திக் கொண்டே இருந்தால், செங்கோட்டையிலிருந்து காஷ்மீர் காடுகள் வரை உங்களைத் தாக்குவோம் என்று நான் முன்பே சொன்னேன்.
அல்லாஹ்வின் அருளால், நாங்கள் அதைச் செய்துள்ளோம். எங்கள் துணிச்சலான மனிதர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். அவர்களால் இன்னும் உடல்களை எண்ண முடியவில்லை.” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சட்டமன்றத்திலே பேசிய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.