இந்தியா - ரஷ்யா உறவுகள் உலக நலனுக்கு முக்கியமானது - இந்திய வெளியுறவுத்துறை
19 Nov,2025
இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின் ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக்கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.