கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்
19 Nov,2025
இந்தியாவில் தேடப்படும் கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதன்படி இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் இதுவரை நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் தேடப்படும் கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைவார்கள் எனத் தெரிகிறது.
யார் இந்த அன்மோல் பிஷ்னோய்: அன்மோல் பிஷ்னோய் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் மீது மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவுக்கு மாறி மாறி பயணம் செய்தது தெரியவருகிறது.
இவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு போலீஸார் ஆங்கிள் மானிட்டர் ( ankle monitor ) பொருத்தினர். இது ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கருவியாகும். இதன்மூலம் கைதானோர் ஜாமீனில் வெளிவந்தாலும்கூட அவர்கள் செல்லும் இடங்களை கண்காணிக்க இயலும். இது கருப்பு நிறப் பட்டையாக இருக்கும். இதனை அவ்வளவு எளிதாக அகற்ற இயலாது.
இந்நிலையில், அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்த பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக், மத்திய அரசு உடனடியாக அன்மோலை விமான நிலையத்திலேயே கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் மத்திய அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார்.
அன்மோலின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது அகமதாபாத் சபர்மதி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.