இந்திய எல்லையில் பிரம்மாண்ட ராணுவ முகாம்.. உள்ளே பதுக்கப்பட்டுள்ள ஏவுகணைகள்?
25 Oct,2025
இந்தியா சீனா இடையே எல்லையில் கடந்த பல ஆண்டுகளாகவே சலசலப்பு இருந்து வருகிறது. 2020ல் அது பெரிய மோதலாக வெடித்த நிலையில், இப்போது நிலைமை சீராகி வருகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியாவுக்கு மிக அருகே சீனா புதிய ஏவுகணை மையங்களை அமைத்து வருவதாக சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளது. இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா சீனா இடையே எல்லையில் சலசலப்பு இருந்து வந்தது. 2020ல் கல்வான் மோதலில் அது பெரிய விஷயமாக வெடித்தது. இரு தரப்பு வீரர்களும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதையடுத்து இரு தரப்புமே எல்லையில் ராணுவத்தைக் குவித்தது.
பதற்றத்தைக் குறைக்கப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு தான் அங்கு மெல்ல அமைதி திரும்பியது. இந்தியா சீனா இடையேயான உறவும் மெல்லச் சீராகி வருகிறது. இரு நாடுகளும் நேரடி விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தான் இந்திய எல்லையில் சீனா சில கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் புதிய கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது கடந்த 2020ல் எல்லை மோதல்கள் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இடமாகும். சாட்டிலைட் படங்களை வைத்து ஆய்வு செய்து பார்க்கும்போது அங்குச் சீனா ஒரு விமானப் பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குவது தெரிகிறது.
கட்டுப்பாட்டு மையம், வீரர் முகாம்கள், வெடிமருந்து சேமிப்பு இடங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் என அதிநவீன வசதிகளுடன் கட்டுப்படுவது போலவே தெரிகிறது. மேலும், இந்த வளாகத்தின் மூடிய நிலையில் பல ஏவுகணை தளங்கள் உள்ளதாம். அதாவது அதன் மேற்பரப்பு மூடியிருக்கும். ஏவுகணைகள் இருப்பது தெரியாது. ஆனால், தேவைப்படும் போது, கூரைகள் திறக்கப்பட்டு, உள்ளே இருந்து ஏவுகணைகள் பாயுமாம்.
ஏவுகணைகள்
நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன HQ-9 வான் ஏவுகணை அமைப்புகளைச் சீனா இங்குப் பதுக்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த புவிசார் நுண்ணறிவு நிறுவனமான ஆல் சோர்ஸ் அனாலிசிஸ் என்ற நிறுவனமே முதலில் சீனாவின் கட்டுமானத்தைக் கண்டுபிடித்துள்ளது.
கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு வளாகம் கார் கவுண்டியில், இந்திய சீன எல்லையில் இருந்து வெறும் 65 கி.மீ தொலைவிலும் கட்டப்பட்டுள்ளதை இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது சமீபத்தில் இந்தியா மேம்படுத்திய தனது நியோமா விமான நிலையத்திற்கு நேர் எதிரே இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். அங்கும் ஓபன் ஆகக்கூடிய கூரைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அடியில் ஏவுகணைகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு தளத்திலும் இரு ஏவுகணை லான்சர்களை நிலைநிறுத்த முடியுமாம்.
பாங்காங் ஏரிக்கு அருகே இந்த வளாகத்தின் சில பகுதிகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளதாம். அதைச் சீக்கிரம் முடிக்கவும் சீனா ஆர்வம் காட்டி வருகிறது. எல்லையில் சீனா இதுபோன்ற பெரிய கட்டுமானத்தை மேற்கொள்வது பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு அல்லது சீனா அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் இதுவரை சொல்லவில்லை.