சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள் மற்றும் இளைய ராஜாவின் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளைய ராஜாவின் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி வீடு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர்.
இதேபோல், இளையராஜா அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த மர்ம பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளி கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும், கர்நாடக முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து அம்மாநில போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் எந்த மர்மப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே அதுவும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
இந்த மிரட்டல் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்று புரளியைக் கிளப்பும் கும்பல் வெளிநாட்டில் இருந்து செயல்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக போலீஸ் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக நாள்தோறும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர், அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள், டிஜிபி அலுவலகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.