இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்த மாதம் இறுதிக்குள் ஒப்புக்கொண்டிருந்ததன. பயணிகள் விமானப் போக்குவரத்து இடையேயான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 26 முதல் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது. கொல்கத்தாவிற்கும் குவாங்சோவிற்கும் இடையே தினசரி நேரடி விமானங்களை இயக்க உள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
இந்தியா சீனா இடையேயான நேரடி விமான சேவை தொடர்பான ஒப்பந்தம் அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி நாளில் (இன்று தசரா பண்டிகை) கையெழுத்தாகி உள்ளது. இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நடத்திய சந்திப்புக்குப் பிறகு இந்த பெரிய முன்னேற்றம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ளது.
பேச்சுவார்த்தை
அதேநேரம் விமான சேவை தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இரு நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்திருக்கிறது நேரடி விமான சேவையை மீண்டும் கொண்டுவருவதிலும், அதற்காக திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
நேரடி விமான சேவை
எனவே இன்று கையெழுத்தாகி உள்ள புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் விமான சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட விமான நிறுவனங்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையில், குளிர்கால அட்டவணையில் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது.
இண்டிகோ அறிவிப்பு:
இந்தியா சீனா இடையேயான இந்த இராஜதந்திர நடவடிக்கையைத் தொடர்ந்து, இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவைகளை மீண்டும் அறிவித்திருக்கிறது. அக்டோபர் 26 முதல், இந்தியாவின் கொல்கத்தாவிற்கும் சீனாவின் குவாங்சோவிற்கும் இடையே தினசரி நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், விரைவில் டெல்லியிலிருந்து குவாங்சோவிற்கும் நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு மாற்றம்
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் நட்புறவு மேம்படும் என தெரிகிறது.
வர்த்தகம் மற்றும் சுற்றுலா
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததால், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி சேவைகளும் இரு நாடுகளுக்கும் இடையே பாதிக்கப்பட்டன. விமான இணைப்புகளை மீண்டும் தொடங்குவது, எல்லை கடந்த வர்த்தகம், இரு நாட்டு வணிகர்கள் இடையே வர்த்த கூட்டு முயற்சி அதிகரிக்கும், சுற்றுலாவும் இரு நாடுகளிலும் மேம்படும்.