மத்திய பிரதேசத்தில் துர்கா தேவி சிலைகளை கரைக்கும் போது விபரீதம்.. 10 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
02 Oct,2025
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வின்போது இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், 13 பேர் உயிரிழந்தனர்; இவர்களில் பத்து பேர் குழந்தைகள் ஆவார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் அருகே சம்பல் ஆற்றில் ஒரு டிராக்டரும், காண்ட்வா மாவட்டத்தின் பாந்தனா அருகே ஒரு டிராக்டரும் துர்கா சிலை கரைக்கும் நிகழ்வில் விபத்தில் சிக்கியது.
இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சி துர்கா பூஜையின் இறுதி நாளில் செய்யப்படும் சடங்காக வடமாநிலங்களில் உள்ளது. விஜயதசமி நாளில் துர்கா சிலை கரைப்பு நடைபெறும். மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, திரிபுரா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில் மிகுந்த பக்தியுடனும், பாரம்பரியத்துடனும் கொண்டாடப்படுகிறது.
துர்கா பூஜை என்பது அன்னை துர்கா மகிஷாசுரனை வென்று தீமையை அழித்ததைக் குறிக்கும் ஒரு விழா என்பதால், துர்கா தேவி தனது குழந்தைகளுடன் ஆண்டுக்கு ஒருமுறை தன் பூர்வீக வீடான பூமிக்கு வந்துவிட்டு, மீண்டும் தனது கணவரான சிவபெருமானின் இல்லமான கைலாயத்துக்குத் திரும்புவதாக வடமாநிலங்களில் நம்பப்படுகிறது. எனவே துர்கா தேவி மீண்டும் தனது நிலையான இடத்திற்குத் திரும்புவதைக் குறிக்கும் விதமாகச் சிலைகள் ஆறுகள், குளங்கள் அல்லது கடல்களில் கரைக்கப்படுகிறது. இதற்காக சிலைகள் இசை, நடனம் மற்றும் மிகுந்த ஆரவாரத்துடன்
ஊர்வலமாக நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். அப்படித்தான் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் அருகேயுள்ள இங்கோரியா பகுதியில், பக்தர்கள் நிறைய பேர் டிராக்டர் ஒன்றில் துர்கா சிலையுடன் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சம்பல் ஆற்றுக்குள் விழுந்தது. 12 வயது சிறுவன் தவறுதலாக டிராக்டரை இயக்கியதால், டிராக்டர் முன்னோக்கிச் சென்று ஆற்றுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 12 குழந்தைகள் ஆற்று நீரில் விழுந்தனர். இதில் கிராம மக்கள் 11 குழந்தைகளை உடனே பத்திரமாக மீட்டனர், ஒரு குழந்தையை காணவில்லை. மீட்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். விபத்தில் சிக்கிய டிராக்டர் பின்னர் கிரேனால் மீட்கப்பட்டது. காணாமல் போன ஒரு குழந்தையைத் தேடும் பணியில் காவல்துறையினரும்,
மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். Advertisement காண்ட்வா மாவட்டத்தில் குளத்தில் விபத்து காண்ட்வா மாவட்டத்தின் பாந்தனா வட்டத்தில், அர்ட்லா மற்றும் ஜாம்லி கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் துர்கா சிலையைக் கரைப்பதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இதில் இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் எட்டு பேர் பெண் குழந்தைகள் ஆவர். மேலும் சிலரை காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. டிராக்டரில் அதிகப்படியான ஆட்கள் சென்றதே குளத்தில் கவிழக்காரணம் எனறு கூறப்படுகிறது.