சென்னையில் வசிக்கும் ஆர்.பகிசன் (34) இந்திய பாஸ்போர்ட் உட்பட இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களை கொண்டுள்ளார். சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பாஸ்போர்ட்-ல் தனது மனைவியின் பெயரை சேர்க்க விண்ணப்பித்த போது அவரது பெயரை சேர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவர். 1991-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்ட போது அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். பகிசன் தமிழ்நாட்டிலேயே பிறந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே தொடர்ந்து வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் இருவரும் இந்தியர் அல்ல (இலங்கை நாட்டவர்) என்பதால் அவர் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார், எனவே அவர் 'நாடற்றவர்' என்று தெரிவித்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர்
இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, 1987-ம் ஆண்டுக்கு ஜூலை 1ம் தேதி அல்லது அதன் பின் இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே, அவர் இந்திய குடியுரிமை பெறமுடியும். மேலும், பெற்றோர் இருவரும் 'சட்டவிரோத குடியேறிகளாக' இருக்கக் கூடாது.
இந்தியாவில் அகதிகள் குறித்த தேசிய அளவிலான தெளிவான சட்டமும் கொள்கையும் இல்லாததால், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தாலும் அவர்கள் 'சட்டவிரோத குடியேறிகளாகவே' கருதப்படுகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1) (b) நாடற்றவர்களையும், அகதிகளையும் 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வரையறுக்கிறது.
"நான் எப்போதுமே என்னை இந்திய குடிமகனாகவே நினைத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் யாரும் என்னை இந்திய குடிமகன் இல்லை என்று எங்கும் கூறியதில்லை. என்னிடம் உள்ள ஆவணங்களை முறையாகவே பெற்றுள்ளேன். என் பெற்றோர் இலங்கை நாட்டவர் என்பதை எங்கும் மறைத்ததில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் காவல் நிலையத்துக்குச் சென்று நாங்கள் கையெழுத்திட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திலும் எங்கள் அடையாளத்தை மறைத்து எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
முதல் முறையாக நான் 'நாடற்றவன்' , இந்தியன் அல்ல என்று என்னிடம் கூறிய போது, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது தெரிந்தவுடன், உடனே சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்" என்று பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.பகிசன் கூறினார்.
1991-ம் ஆண்டு இந்தியா வந்த பகிசனின் குடும்பம்
பகிசனின் குடும்பத்தினர் 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவரது தாய் பகிசனை கர்ப்பத்தில் கொண்டிருந்தார். ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளாக தங்களை பதிவு செய்தனர். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள செந்தலை முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
"1991 மே மாதத்துக்குப் பிறகான காலத்தில் இலங்கை தமிழர்கள் மீதான கோபம் இருந்தால், சில முகாம்கள் மூடப்பட்டன. அப்போது நாங்கள் இருந்த முகாமும் மூடப்பட்டதால், 1992-ம் ஆண்டில் அங்கிருந்து பொது சமூகத்தில் வாழ அனுப்பப்பட்டோம். எனினும் தலைமை குடியேற்ற அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தோம். சென்னையில் முதலில் சிறிய காலம் வளசரவாக்கத்தில் இருந்தோம். பிறகு ராமாபுரத்துக்கு வந்த நாங்கள் அங்கேயே தான் இருந்து வருகிறோம்" என்கிறார் பகிசன்.
பகிசன் 2024-ம் ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்றுள்ளார். அவருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இலங்கையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. "என் மனைவியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நான் இலங்கை சென்றுள்ளேன். அதற்கு முன் சென்றதில்லை." என்று அவர் கூறுகிறார்.
அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது உட்பட்ட காரணங்களுக்காக பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். முதல் முறை மறுக்கப்பட்ட அவரது ஜாமீன் மனு, இரண்டாவது முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
படக்குறிப்பு, அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாக அரசு தரப்பில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தன்னை முகாமில் அடைத்தால் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ள முடியாது, தான் பணிக்கு செல்ல முடியாது என்று பகிசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி ஆர் ராமன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
பகிசன் தற்போது தனது இந்திய ஆவணங்களை அதிகாரிகளிடம் சரண் செய்துள்ளார்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும், இந்தியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவது சாத்தியமில்லை.
1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தப்பட்ட பிறகு, அதாவது 1987-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கக் கூடாது என்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையிலேயே பகிசன் 'நாடற்றவர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 6- ன் கீழ் 'naturalization' (இயல்புப்படுத்துதல்) அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறார். " Naturalization அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார்.
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், ஓராண்டு காலம் தொடர்ந்து இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு 14 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் சட்டம் கூறும் நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமை சட்டத்தின் படி, இலங்கை அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. அரசின் கருணையை நம்பியே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது" என்று இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் சந்தேஷ் சரவணன் கூறினார்.
தமிழ்நாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் உட்பட 58,357 இலங்கைத் தமிழர்கள் (19,300 குடும்பங்கள்) தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பு முகாம் உட்பட 105 முகாம்களில் இருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்த 13,400 குடும்பங்களில் 33,479 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர் என்று வெளிநாடு தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் தரவுகள் (2023) தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் தீர்வுகளுக்காக 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை 2023-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கான நீண்ட கால தீர்வுகள் குறித்து பேசிய அந்த குழுவின் அறிக்கை, பகிசனைப் போன்று 1987-க்கு பிறகு, பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவராக இருக்கும் குடும்பங்களில் இந்தியாவில் பிறந்த 22,058 பேர் இருப்பதாக கூறுகிறது.
இவர்களை தவிர மேலும் 848 பேர், இலங்கைத் தமிழர் பெற்றோர்களுக்கு 1987-ம் ஆண்டு பிறகு பிறந்து, ஆனால் பிறந்த இடம் குறிப்பிடாமலும் உள்ளனர். இவை தமிழ்நாட்டில் 104 முகாம்களில் உள்ள 57,391 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் பெறப்பட்டன.
"இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் நேரடி ஈடுபாட்டுடன் நடைபெற்றது. எனவே அவர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வகைப்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.
தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான கோவி லெனின், பிபிசி தமிழிடம் பேசும் போது, " இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதில் ஆவணங்கள் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்களாக இருப்பார்கள். அவர்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்காது.
இந்த ஆவணங்களைப் பெற்று தருவதில் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இந்திய குடியுரிமை கேட்டு நீதிமன்றத்தை நாடிய 13 பேருக்கு அவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 56 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதலில் இவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
திருச்சி முகாமில் இருந்த கே.நளினி இந்திய குடிமகளாக 2022-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார். இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் இந்திய குடியுரிமை பெற்ற முதல் நபர் அவர் ஆனார். அவர் 1986-ம் ஆண்டு இந்தியாவில் மண்டபம் முகாமில் பிறந்திருந்தார்.
1950-க்கும் 1987-க்கும் இடையில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள் ஆவர் என்று இந்திய குடியுரிமைச் சட்டம் கூறுவதால், அவரது குடியுரிமையை அங்கீகரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2022-ம் ஆண்டு தெரிவித்திருந்தது. நளினி போன்று 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்த 148 பேர் முகாம்களில் இருப்பதாக இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நளினி உட்பட பல இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை வழக்குகளை கையாண்டு வரும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரோமியோ ராய், "இந்தியாவில் அகதிகளுக்கான தனிச் சட்டம் இல்லாதது பாகுபாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. 'அகதிகள்' யார் என்ற தெளிவான வரையறை கிடையாது. திபெத்திய அகதிகளுக்கு இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கும் வசதிகள், வெளிநாடு செல்லும் அனுமதி ஆகியவை இலங்கைத் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை.
இலங்கை தமிழர்களின் நிலையை விட ரோஹிங்க்யா மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்திய குடியுரிமை வழங்குவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரத்யேக அதிகாரங்களில் ஒன்று. ஒரு துறையில் சிறந்து விளங்கும், வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கூட அரசு நினைத்தால் குடியுரிமை வழங்க முடியும். எனவே அரசு நினைத்தால் எந்த நிபந்தனைகளையும் தளர்த்தி மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியும்" என்கிறார்.