கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு தமிழகம் திரும்பிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான துயரச் சம்பவத்தை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று திரும்பிய நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கரூர் சென்றுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து அங்கிருந்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
முன்னதாக கூட்ட நெரிசலில் பலர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். உடனடியாக உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின், இரவே தனி விமானத்தில் கரூர் சென்றார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு துபாய் செல்லத் திட்டமிட்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமது பயணத்தை ரத்து செய்தார். கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரச்சாரத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலினின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் வேதனையைக் கொட்டினர். அவர்களுக்கு கண் கலங்கியபடி, ஆறுதல் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி நிகழ்ந்த உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மயக்கமடைந்தோர், உடல்நலம் குன்றியோருக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும், மருத்துவக் குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்" என்று தெரிவித்தார்.