திடீர் "மேகவெடிப்பு".. உத்தரகாண்ட்டில் 50 பேர் மாயம்.. கிராமத்தை அடித்து சென்ற வெள்ளம் -
05 Aug,2025
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தாரலி கிராமத்தில் இன்று திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 50க்கும் அதிகமானவர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஆன்மிக தலங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாகும். இங்கு பிரசித்திப்பெற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. பத்ரிநாத், கேதார் நாத் கோவில்கள் உள்ளன. இமயமலையையொட்டி இந்த மாநிலம் அமைந்துள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மலைகள் வானளவு உயர்ந்து உள்ளன.
இதனால் அடிக்கடி உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு என்பது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் உத்தரகாசி மாவட்டம் தாரலி கிராமத்தில் கனமழை பெய்தது. திடீர் மேகவெடிப்பால் குறைந்த நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் எதிர்பாராத விதமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று மதியம் சுமார் 1.40 மணியளவில் திடீரென்று தாரலி கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. மலையில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த வெள்ளம் கட்டங்களை சேதப்படுத்தியது. இதனால் தாரலி கிராமத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மண், பாறைகளுடன் வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் கட்டடங்கள் சேதமாகின. தற்போது வரை 4 பேர் பலியாகி உள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடங்கி உள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்துக்கு முக்கிய காரணம் கங்கோத்ரி தாம் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பு தான் என்று தெரியவந்துள்ளது. இதனால் புனித ஸ்தலமான கங்கோத்ரி தாம் நகருக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் தாரலி கிராமத்துக்குள் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து
ட்டங்களை அடித்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Also Read உத்தரகாண்டில் மேகவெடிப்பு.. கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய வெள்ளம்.. அதிரவைக்கும் ”வீடியோ” காட்சிகள் இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ‛‛தாரலி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அதிக வலியை கொடுத்துள்ளது. சீனியர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். மீட்பு பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினர், மாவட்ட நிர்வாகிகள் மீட்புபணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் பிரார்த்தனை செய்து வருகிறேன்'' என்றார்.