அமெரிக்காவில் மாயமான 4 இந்திய முதியவர்கள் கார் விபத்தில் சிக்கி பலி: ஆன்மீக பயணத்தில்
04 Aug,2025
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பபலோ பகுதியில் இருந்து பிரபல இந்திய வம்சாவளி டாக்டர் கிஷோர் திவான் (89) அவரது மனைவி ஆஷா திவான் (85) மற்றும் ஷைலேஷ் திவான் (86), கீதா திவான் (84) தம்பதியுடன் வெர்ஜீனியாவின் மார்ஷல் கவுண்டியில் உள்ள இஸ்கான் நிறுவனர் பிரபுபாதாவின் தங்க மாளிகைக்கு ஆன்மீக பயணமாக கடந்த வாரம் காரில் புறப்பட்டனர். அதன்பின் இவர்கள் காணாமல் போயினர். இவர்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கடைசியாக கடந்த 29ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள பர்கிங் கிங் சிற்றுண்டி உணவகத்தில் 4 பேரும் தென்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிற்றுண்டி வாங்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், மார்ஷல் கவுண்டி பகுதியில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவலை கவுண்டியின் ஷெரிப் மைக் டவுஹெர்டி உறுதிபடுத்தி உள்ளார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.