கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வரும் ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், நிமிஷா பிரியாவை காப்பாற்ற எதாவது வழி இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம். கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2017ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் அவர் சிறையில் இருக்கிறார்.
அவருக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 36 வயதான நிமிஷா பிரியா 2020ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை கைதியாக இருந்து வருகிறார். சட்ட நடவடிக்கைகள் தோல்வி தண்டனையிலிருந்து விடுபட அவர் எடுத்த அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டன. இதற்கிடையே நிமிஷா பிரியாவை காப்பாற்றப் போராடும் மனித உரிமை ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் பிரபல ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.
ஏமன் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்த அவர், நிமிஷா பிரியாவை காப்பாற்ற இன்னும் ஒரே ஒரு வழி இருப்பதாகக் குறிப்பிட்டார். நிமிஷா பிரியாவை காப்பாற்ற வழி இருக்கா? அதாவது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சமாதானப்படுத்தி, நஷ்ட ஈடு தொகையை வாங்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் இதற்குச் செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியை நாடுவதே ஒரே வழி என்று அவர் கூறினார். பேச்சுவார்த்தைக் குழு மஹ்தி குடும்பத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. மேலும்,
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் வேறு எந்த நபருக்கும் கேரளாவில் இலவசமாகச் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது. இதில் விமானப் பயணச் செலவுகளும் அடங்கும்.
மஹ்தி சகோதரர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது சவுதி அரேபியாவில் குடியேற முடிவு செய்தால், அதற்கான செலவையும் ஏற்கக் குழு முன்வந்துள்ளது. இந்தளவுக்கு உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தாலும் மஹ்தி குடும்பத்தினர் இதுவரை இதை ஏற்கவில்லை. இருப்பினும், ஒரு வாரம் இருக்கும் நிலையில், ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாகக் கூறுகிறார் ஜெரோம்!
இந்தியாவின் உதவிகள் நிமிஷா பிரியாவை காப்பாற்ற இந்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என்று ஜெரோம் தெரிவித்தார்.
குறிப்பாக முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் எழுதிய கடிதம் தான், நிமிஷா பிரியாவை விசாரணைக்குக் கொண்டு வர உதவியது என்று அவர் குறிப்பிட்டார். இல்லையென்றால் அவர் எப்போதோ தூக்கிலிடப்பட்டிருப்பார். கடைசி முயற்சியாக இந்திய அரசு ஷேக்குகள் மற்றும் செல்வாக்கு மிக்க மற்ற நபர்களுடனும் பேச முடிந்தால்.. அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பணத்தை ஏற்றுக்கொண்டு நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியும் என்று ஜெரோம் கூறினார்.
இருப்பினும், டைம் குறைவாகவே இருப்பதால் அதற்குள் எல்லா பேச்சுவார்த்தைகளையும் நடத்தி குடும்பத்தினரை ஒப்புக்கொள்ள வைக்க முடியுமா என்பதில் பெரிய கேள்வி இருக்கிறது. Also Read ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு! கேரள நர்ஸ் இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியது எப்படி! என்ன நடந்தது பின்னணி நிமிஷா பிரியா 2017ல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் ஏமனில் இருந்து தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டில் உள்ளூர் நீதிமன்றம் பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஏமனின் உச்ச நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடு மனு 2023ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரியில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் உச்ச அரசியல் கவுன்சிலின் தலைவர் மஹ்தி அல்-மஷாத் அவரது மரண தண்டனையை உறுதி செய்தார். ஏமனின் ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திடம் ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் நிமிஷா பிரியாவை காப்பாற்றக் கடைசியாக ஒரு வாய்ப்பு இருக்கிறது.