இந்தியா விடுத்த வேண்டுகோளால் நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது
07 Jul,2025
நெஹல் மோடி
புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார்.
இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, மோசடி மற்றும் குற்றச் சதி வழக்கு பதிவு செய்தது. இவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடப்பட்டது. லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர வழக்கு நடைபெற்று வருகிறது.
அதேபோல் அமெரிக்காவில் உள்ள நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் வரும் 17-ம் தேதி அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவர் ஜாமீன் கோரினால் அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் எனத் தெரிகிறது.