நடுவானில் விமானத்தில் சரமாரியாக மோதிக்கொண்ட பயணிகள்.. இந்திய வம்சாவளி இளைஞர் கைது.. வீடியோ வைரல்!
06 Jul,2025
விமான பயணத்தின் போது நடுவானில் பயணிக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு கழுத்தைப் பிடித்து நெருக்கியதாகக் கூறப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர், சக பயணியை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 30 அன்று பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு புறப்பட்ட ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு தவறான புரிதலா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது.
விமானத்தில் பயணித்த இஷான் சர்மா என்கிற இளைஞர், தனது சக பயணியான கீனு எவன்ஸை தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்வதையும், சக பயணிகள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வதையும் காண முடிகிறது. எனினும், இருவருமே தொடர் தாக்குதலில் ஈடுபட்டது போலவே தெரிவதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு நேரடியாக உள்ளாகிய கீனு எவன்ஸ் என்பவர் கூறும்போது, “அவர் என் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். ‘நீ சாக வேண்டியவன்ஸ என்னிடம் சவால் விட்டால் இதுவே உன் இறுதி நாளாகும்’ என்று கூறி அவர் என்னை தாக்கினார். இது எச்சரிக்கையில்லாமல், திடீரென நடந்தது” என அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சர்மாவின் நடத்தை குறித்து விமான ஊழியர்களை தான் முன்னதாகவே எச்சரித்ததாகவும், இதுபோன்ற ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்று தான் யோசித்ததாகவும் கூறிய எவன்ஸ், “அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே, எதிர்பார்க்காதபோது என்னுடைய கழுத்தைப் பிடித்து நெறிக்க ஆரம்பித்தார். அந்தச் சூழ்நிலையில் என்னைத் தற்காத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் நானும் அவ்வாறு நடந்துகொள்ள நேர்ந்தது” என்று கூறினார்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு, மியாமி விமான நிலையத்தில் இறங்கியதுமே சர்மா கைது செய்யப்பட்டார். அவர் மீது பேட்டரி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, அவரது வழக்கறிஞர், தாக்குதல் ஒரு தவறான புரிதலால் ஏற்பட்டதாகவும், சர்மா ஒரு மதரீதியான தியான முறையில் ஈடுபட்டிருந்தது எவன்ஸுக்கு புரியாததே மோதலுக்குக் காரணம் என்றும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் சாட்சிகளுடன் வீடியோ பதிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.