ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் விடுதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். போர் விதிகளை மீறி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தெஹ்ரானின் கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்கள் விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தெஹ்ரானிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், தெஹ்ரான் நெடுஞ்சாலைகள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, இந்திய மாணவர்களை மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வரும் பணியையும் மேற்கொண்டிருக்கிறது.
ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது: +989010144557; +989128109115; +989128109109.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கி வருகின்றனர். கடந்த வாரம் இஸ்ரேல், ஈரான் மீது 'ரைசிங் லயன் நடவடிக்கை' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தெஹ்ரானில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலையை ஈரான் கண்டுபிடித்து அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்காக வேலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து 200 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள், 23 டிரோன்களுக்கான பாகங்கள், லாஞ்சர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்ததைத் தொடர்ந்து டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் இயங்கும் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. மேலும், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
"இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவசர உதவிக்கு தூதரகத்தின் 24x7 உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்" என்றும் அறிவித்திருக்கிறது. தொலைபேசி +972 54-7520711 +972 54-3278392 மின்னஞ்சல் cons1.telaviv@mea.gov.in இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.
சீனா, துருக்கி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஈரான் மற்றும் இஸ்ரேல் உடனடியாக பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கில் அமெரிக்க தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், இந்திய அரசு டெஹ்ரானில் உள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.