இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு
17 Jun,2025
டெஹ்ரான்: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் ஈரானில் படிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு ஈரான் அரசை, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தங்களது தரைவழி எல்லைகளை திறந்துள்ளதாகவும், அதன் வழியாக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் ஈரான் அரசு நேற்று அறிவித்துள்ளது.
ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரான் மீதான வான்வழி மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் அனைத்து தரைவழி எல்லைகளும் திறந்திருக்கும். மாணவர்கள் பாதுகாப்பாக செல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
HinduTamil16thJuneHinduTamil16thJune
இந்தியத் தூதரகம் ஏற்பாடு: இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை ஈரானுக்குள்ளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. மேலும், விரைவில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
3 நாட்கள் தூங்கவில்லை: ஈரானில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த சில நாட்களாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதுகுறித்து 3-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் இம்திசால் மொகிதீன் கூறும்போது, “தெஹ்ரானில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சுமார் 350 இந்திய மாணவ, மாணவியர் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். எங்களது விடுதி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் குண்டுகள் வீசப்படுகின்றன.
கடந்த 3 நாட்களாக நாங்கள் தூங்கவில்லை. விடுதியின் அடித்தளத்தில் தஞ்சமடைந்து உள்ளோம். மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். மத்திய அரசு எங்களை பத்திரமாக மீட்க வேண்டும்” என்று தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டில் சுமார் 32,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.