இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக உச்சக் கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருவதால், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடிமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், தெஹ்ரானில் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தெஹ்ரானில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் மீண்டும் ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: -
தெஹ்ரானில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடிமக்கள் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். இந்திய குடிமக்கள் உடனடியாக தூதரக் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். தெஹ்ரானில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும், இதுவரை தூதரகத்தை தொடர்பு கொள்ளாதவர்களும் உடனடியாக : +989010144557; +989128109115; +989128109109," என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற ஈரான், தரைவழி எல்லைகளை திறந்து இருந்தது. ஈரானில் இந்திய மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் பயின்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆவர். ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஈரான் வான் பரப்பு மூடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு தவித்து வரும் இந்திய மாணவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கு உதவுமாறு ஈரான் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. இதனை ஏற்ற ஈரான் அரசு தங்களது தரைவழி எல்லைகளை திறந்து இருப்பதாகவும் அதன் வழியாக மாணவர்கள் வெளியேறலாம் என்றும் அறிவித்து இருந்தது.
ஈரான் மீது கடந்த 13-ம் தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் என பலரும் கொல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் அட்டாக் செய்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், அதனை ஈரான் நிராகரித்துவிட்டது. 5வது நாளாக இன்றும் ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது. இதற்கிடையே, டெஹ்ரானில் இருந்து வெளியேறுமாறு ஈரான் நாட்டு மக்களை டிரம்ப் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது. ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள்.
உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்றும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். இதனால் தெஹ்ரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படலாம் என்பது பாதுகாப்பு நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. டிரம்ப் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் தெஹ்ரானில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.