மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை
15 Jun,2025
தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள 56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவாிடம் , தனக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களல் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த 6 மில்லியன் ரேண்ட் (ரூ.3.22 கோடி) பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். . இதற்கு சான்றாக போலியான பற்றுச்சீட்டுக்களையும் காட்டியுள்ளார். ஆசிஷ் லதா மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 6 மில்லியன் ரேண்ட் பணம் வழங்கியுள்ளார்.
ஆனால் ஆசிஷ் லதா வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த வில்லை. அவர் கொடுத்த ஆவணங்களும் போலி எனத் தெரிந்தது. இதனால் ஆசிஷ் லதா மீது மகாராஜ் மோசடி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளிவந்துள்ளார்.
மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர். தென்னாபிரிக்காவில் பிரபலமான இவரது தாயான எலா காந்தியின் பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அரசுகள் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது