"பேய்" நகரமாக மாறும் இந்திய சிட்டி! ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த ஊரும் விற்பனை.
05 Jun,2025
இந்தியாவில் இங்கு ஒரு இடத்தில் திடீரென ஒட்டுமொத்த ஊரும் விற்பனைக்கு வருவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 150+ வீடுகள் விற்பனைக்கு வந்துள்ள. அங்குத் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவர்களும் கூட அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அங்கு ஏன் இதுபோல நடக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். நமது நாட்டில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பொதுவாக ஒரு ஊரில் ஒரே நேரத்தில் 5, 10 வீடுகள் தான் அதிகபட்சம் விற்பனைக்கு வரும். ஆனால், இங்கு ஒரு இடத்தில் ஒட்டுமொத்த ஊரும் விற்பனைக்கு வந்துள்ளது.
விற்பனைக்கு வந்த வீடுகள் ராஜஸ்தானில் தான் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சாம்பார் நகரத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்கு ஒட்டுமொத்தமாக அனைத்து வீடுகளையும் விற்பனை செய்துவிட்டு அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஓரிருவர் இல்லை. ஒட்டுமொத்த ஊருமே அங்கிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள். நகரம் முழுக்க இதற்கான அறிவிப்பு போஸ்டர்கள் நிரம்பியுள்ளன. அந்தளவுக்குத் தண்ணீர் பஞ்சம் அங்கு மிக மோசமாக இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை உப்பு உற்பத்தி மற்றும் புலம்பெயர்ந்த வரும் பறவைகளுக்குப் புகழ்பெற்ற சாம்பார் நகரம் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கே ஒரு இடத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "கடுமையான தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக இந்தத் தெருவில் உள்ள அனைத்து வீடுகளும் விற்பனைக்கு உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரி கிஷன் பரிக் என்பவரது வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "இந்த வீடு விற்பனைக்கு உள்ளது. கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, வீட்டை விற்றுவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. பழமையான வீடுகள் இந்த சாம்பார் நகரம்,
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள வார்டு 22 மற்றும் 23ல், சர்புஜா மந்திர் அருகே உள்ள பல வீடுகளிலும் இதுபோன்ற போஸ்டர்களைக் காண முடிகிறது. அவற்றில் சில வீடுகள் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தவை. அதாவது இத்தனை ஆண்டுகள் அங்கு வாழ்ந்தவர்கள் கூட தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் வெளியேறத் தயாராக உள்ளனர்.
பாஜக கவுன்சிலர் இது தொடர்பாக உள்ளூர் பாஜக கவுன்சிலர் கௌதம் சிங்கானியா கூறுகையில், "கடந்த 7 வருடங்களாக எங்கள் வீடுகளுக்குக் குழாய் தண்ணீர் சப்ளை கூட இல்லை. இதனால் இங்கு வசிக்கும் 200 பேரும் சேர்ந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். தண்ணீர் இல்லாமல் இங்கு வாழ்ந்து என்ன பயன்? அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு தெருவிலும் போஸ்டர் ஒட்டியுள்ளோம். இதுவரை 150 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த சிக்கல் இருந்தது. இப்போது தண்ணீர் பற்றாக்குறை உச்சத்திற்குப் போய்விட்டது" என்றார். முன்பு இங்கு சுமார் 3,500 பேர் வசித்து வந்த நிலையில், தற்போது 1,700 பேர் மட்டுமே உள்ளனர். தண்ணீர் பஞ்சத்தால் ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறிவிட்டனர். விரைவில் மீதமுள்ளவர்களும் வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.