11 பேரை பலிகொண்ட பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்..
04 Jun,2025
கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
11 பேரை பலி கொண்ட பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த சோக சம்பவத்தை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை வென்றது.
இதனையொட்டி வெற்றி கொண்டாட்டங்களுக்கு இன்று பெங்களூரு மற்றும் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துக் கொண்டு சென்றார்கள்.
இந்த நெரிசலில் சிக்கி தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நெரிசல் ஏற்படுவதற்கு அனுமதிச்சீட்டு இல்லாதவர்களும் மைதானத்திற்குள் நுழைய முயன்றது தான் காரணம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதிக கூட்டம் வரும் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே கணிக்கவில்லை என்றும் தடுப்பு அமைப்புகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
.
மைதானத்திற்கு வெளியே சோக காட்சிகள் நடந்தாலும் மைதானத்திற்கு உள்ளே வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.