பாகிஸ்தானால் அச்சுறுத்த முடியாது! ரஷ்யாவில் கனிமொழி
23 May,2025
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா தரப்பு நியாயத்தை உலகிற்கு எடுத்து சொல்ல மத்திய அரசு தூதுக்குழுவை அனுப்பியுள்ளது. ரஷ்யாவில் தூதுக்குழு சார்பில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, அணு ஆயுதத்தை காட்டி பாகிஸ்தான் இந்தியாவை பயமுறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
இந்தியா அமைதி பக்கம் நிற்பதாகவும், நேர்மைக்காக இந்தியா தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கனிமொழி எம்பி பேசியதாவது, "இந்தியா-பாக் மோதல் குறித்த நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் அணுசக்தி நாடு, அது அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் உண்மையை தெளிவுப்படுத்த விரும்பினோம். அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்கிற செய்தியை நாங்கள் சொல்ல விரும்பினோம்.
இந்தியா நேர்மைக்காகவும், அமைதிக்காகவும் தொடர்ந்து போராடும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக ஒன்று நிற்போம்" என்று கூறியுள்ளார்.
கனிமொழியை தொடர்ந்து பேசிய ஆர்ஜேடி எம்பி பிரேம் சந்த் குப்தா, "பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ரஷ்யர்களும் கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் தூண்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பதும், பயங்கரவாதத்தை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதும்தான் ரஷ்ய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் சொல்ல வந்த செய்தி. உலகில் நடைபெறும் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைக்கும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பாகிஸ்தானுடன் சில தொடர்புகள் உள்ளன. அவர்கள் நான்கு போர்களையும் நூற்றுக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் எங்கள் மீது திணித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றது. இது பாகிஸ்தானை சேர்ந்த லக்ஷர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் கிளையாகும். எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளை குறி வைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பாகிஸ்தான் வரிந்து கட்டிக்கொண்டு வந்து, வாங்கிக்கட்டிக்கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.