ரூ.4.28 கோடி மதிப்புள்ள இந்திய மாம்பழங்களை ஏற்க மறுத்த அமெரிக்கா..
22 May,2025
உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான இந்தியாவிலிருந்து சமீபத்தில் சென்ற குறிப்பிட்ட அளவு மாம்பழங்களை அமெரிக்கா ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது.
நம் நாட்டில் மாம்பழ சீசன் தற்போது உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்ட ஏற்றுமதிகளின் மதிப்பு சுமார் $500,000 இந்திய மதிப்பில் (ரூ.4.28 கோடி) ஆகும். அமெரிக்கா மொத்தம் 15 ஷிப்மென்ட் இந்திய மாம்பழங்களை ஏற்க மறுத்து நிராகரித்து உள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆவணப்படுத்துதல் செயல்பாட்டில் (டாக்குமென்டேஷன் பிராசஸ்) பிழைகள் இருப்பதாகக் கூறி, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மாம்பழங்களை அமெரிக்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்ட மாம்பழங்கள் வந்த கப்பலை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது அதை அழிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். மாம்பழங்கள் அழுகும் தன்மை கொண்டவை என்பதால் அனைத்து ஏற்றுமதியாளர்களும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான மாம்பழங்களை அழிக்க முடிவு செய்தனர்.
irradiation எனப்படும் கட்டாய நடவடிக்கை தொடர்பான ஆவணங்களில் அமெரிக்க அதிகாரிகள் முரண்பாடுகளைக் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களில் உள்ள பாக்டீரியா, பூச்சிகள் அல்லது பிற நோய்க் கிருமிகளைக் கொன்று அவற்றின் ஆயுளை அதிகரிக்க ionising கதிர்வீச்சை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு செயல்முறையாகும். இது சார்ந்த ஆவணங்களில் நிர்வாகப் பிழைகள் (administrative errors) இருப்பதை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்ததாகக் கூறப்படுகின்றது.