இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை!
18 May,2025
இஸ்லாமாபாத்: இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் உயர்மட்டத் தலைவரான ரசவுல்லா நிஜாமானி என்ற அபு சயீபுல்லா காலித் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவில் நடந்த பல பெரிய தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் இவர்.
ரசவுல்லா நிஜாமானி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதியாக இருந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ராம்பூரில் நடந்த சிஆர்பிஎஃப் முகாம் தாக்குதல், 2005 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு (ISC) தாக்குதல் மற்றும் 2006 ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைமையகம் மீதான தாக்குதல் ஆகிய மூன்று பெரிய தாக்குதல்களில் காலித் ஒரு முக்கிய சதிகாரராக அறியப்பட்டவர்.
வினோத் குமார் என்ற புனைப்பெயரில் செயல்பட்ட காலித், பல ஆண்டுகளாக நேபாள நாட்டில் வசித்து வந்தார். அங்கு அவர் ஒரு போலி அடையாளத்தின் கீழ் வாழ்ந்து, நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணான நக்மா பானுவை மணந்தார். அங்கு இருந்தபடி, லஷ்கர் -இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, ஆட்சேர்ப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்து, வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில், ரஸவுல்லா காலித் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பாடின் மாவட்டத்தில் உள்ள மாட்லிக்கு இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு, அவர் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் முன்னணி அமைப்பான ஜமாத்-உத்-தாவாவுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் நிதி சேகரிப்பில் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.
சுட்டுக் கொலை
இந்நிலையில், சிந்து மாகாணத்தில் பயங்கரவாதி ரசவுல்லா நிஜாமானி காலித்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 100 பயங்கரவாதிகளை வீழ்த்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில், யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப் மற்றும் முதாசிர் அகமது போன்ற முக்கியமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.