கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 376 D மற்றும் 376 2 (N) ஆகிய இரண்டு சட்ட பிரிவுகள் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்று தந்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறியது: “சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது வழக்கமான ஆயுள் தண்டனையில் இருந்து வேறுபட்டதாகும். வழக்கமான ஆயுள் தண்டனையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை சாத்தியமாகும். ஆனால், நிர்பயா வழக்கு உத்தரவைத் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு 376 D புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தில், சாட்சிகளுக்கு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வாக்குமூலம் பெறப்பட்டது. கடைசி வரை சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களில் சிபிஐ ரகசியம் காத்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளை கோவை மகளிர் நீதிமன்றம் கையாண்டுள்ளது. இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. அந்த வகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விதிக்கப்பட்டுள்ள சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர்கள் 9 பேரும் தங்களின் இயற்கை மரணம் வரையில் சிறையில் இருக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.
ADVERTISEMENT
HinduTamil13thMayHinduTamil13thMay
பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகள் விவரம்: 120(b) - கூட்டுச்சதி, 354(A) - விரும்பத்தகாத பாலியல் சீண்டல், 354(B) ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துதல், 366 - ஆள் கடத்தல், 376 (D) - கூட்டு பாலியல் வன்கொடுமை, 376 (2 N) - தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை, 509 - மானபங்கம் செய்தல், I.T Act 66E - ஆபாச வீடியோ எடுத்தல், I.T Act 67 - ஆபாச வீடியோ பகிர்தல், 506 (2) - கொலை மிரட்டல் விடுத்தல் ,தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் - பிரிவு 4 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
48 சாட்சிகள், 1500 பக்க ஆவணங்கள் தாக்கல்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு, எதிர்தரப்பு என சுமார் 240 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. லேப்டாப், செல்போன், மெமரிகார்டு, கார் உள்ளிட்ட 30 எலக்ட்ரானிக்ஸ் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகைகள் 390 பக்கங்கள் என வழக்கு விசாரணை ஆவணங்கள் மொத்தம் 1,500 பக்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசு தரப்பில் 76 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பாலியல் வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை 2 ஆண்டுகளாக தொடர் விசாரணை நடத்தி நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
“நியாயமான தீர்ப்பு” - அரசு சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது என அரசு தரப்பில் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியது: “பொள்ளாச்சி வழக்கில் கைதாகி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ முயற்சி வீண் போகவில்லை. நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன்
வழக்கின் தன்மை, பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். இதில் அழிக்கப்பட்ட சில மின்னணு ஆவணங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களால் மீட்டெடுக்கப்பட்டன. சாட்சிகள் சிபிஐ தனிக்குழுக்கள் மூலம் ரகசியமாக அழைத்து விசாரிக்கப்பட்டனர்.
வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சியங்களில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை. விஞ்ஞான பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்டவைகளுக்கு தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சாவ்லா மற்றும் நிர்பயா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை மேற்கொள்காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதிகபட்சமாக திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 5 பெண்கள் பாதிப்பில் தொடர்பு இருப்பதால் 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. மேல்முறையீடு சென்றாலும் தண்டனை நிலைநிறுத்தப்படும்” என்றார்.
எதிர்தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் கூறும்போது, “நீதிமன்ற தீர்ப்பு நகல் பெற்ற பிறகு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார். இதைத் தொடர்ந்து, சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தீர்ப்பின் முழு விவரம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் காலை ஆஜர்படுத்தப்பட்டனர். காலை 10.30 மணி அளவில் நீதிபதி நந்தினி தேவி தண்டனை விவரம் குறித்து அறிவித்தார்.
இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர் தண்டனை குறித்த விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார். அதில், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.85 லட்சம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்தார். இத்துடன் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதமாக விதித்தார்.
தண்டனை விவரம்: சபரிராஜனுக்கு 4 ஆயுள், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள், சதீஷுக்கு 3 ஆயுள், வசந்தகுமாருக்கு 2 ஆயுள், மணிவண்ணனுக்கு 5 ஆயுள், பாபுவுக்கு 1 ஆயுள், ஹேரன்பாலுக்கு 3 ஆயுள், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ.85 லட்சத்தில் இருந்து, இழப்பீடு தொகையை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை பகிர்ந்து அளிக்கப்படும்.
விசாரணையில் நடந்தது என்ன? - முன்னதாக, கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சபரிராஜன் (34), திருநாவுக்கரசு (36), சதீஷ் (35), வசந்தகுமார் (32), மணிவண்ணன் (34),ஹேரன்பால் (34), பாபு (35), அருளானந்தம் (41) மற்றும் அருண்குமார் (35) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரல் 25-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. முதல் கூடுதல் குற்றப்பத்திரிகை 2021 பிப்ரவரியிலும், இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் தனி அறையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஒருவர் தவிர மீதமுள்ள 7 பேர் நேரடியாக வாக்குமூலம் அளித்தனர். கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி முதல் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் மூடப்பட்ட தனி அறையில் நடந்து வந்தது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். அதேவேளையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி நந்தினி தேவி, மறு உத்தரவு வரும் வரை அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.