மாலத்தீவுக்கு நண்பன் இந்தியா தான்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
12 May,2025
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் மாலத்தீவுக்கு உதவ, மத்திய அரசு நிதியுதவியை வழங்க இருக்கிறது. மாலத்தீவு அதிபர் சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்தாலும், இந்த நிதியுதவி மூலம் இந்தியா நட்பு ரீதியாக தனது உறவை பலப்படுத்தியுள்ளது. இந்த உதவியை புரிந்துக்கொண்ட வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல், சரியான நேரத்திற்கு இந்தியா உதவி செய்திருப்பதாக நன்றி தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019 முதல் இந்திய ஸ்டேட் வங்கி மூலம், மத்திய அரசு சார்பில் மாலத்தீவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 50 மில்லியன் டாலர் அளவில் இந்த நிதி உதவி இருக்கும். இதற்காக 'கருவூல மசோதாவை' மத்திய அரசு இயற்றியிருந்தது. இந்த மசோதா தற்போது திருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஆண்டும் நிதி உதவியை இந்தியா வழங்கும் என்பதே இதன் பொருள். இதற்கு நன்றி தெரிவித்து தனது x பக்கத்தில் கலீல் பதிவிட்டிருப்பதாவது, "சரியான நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்த உதவியை இந்தியா செய்திருப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவு பலப்பட்டிருக்கிறது.
பொருளாதார சிக்கல்களை சரி செய்ய எங்கள் அரசு மேற்கொண்டு வரும் நிதி சீர்திருத்த நடவடிக்கைகளையும் இது ஊக்குவிக்கும்" என்று கூறியிருக்கிறார். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக விடுத்திருந்த அறிக்கையில், "மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அடுத்த ஒரு வருடத்திற்கு மாலத்தீவுக்கான 50 மில்லியன் டாலர் அரசு கருவூல மசோதாவை இந்திய அரசு நீடிக்கிறது. மாலத்தீவுக்கான அவசர நிதியாக தனித்துவமான ஏற்பாட்டின் கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை மாலத்தீவு கடல்சார் ரீதியாக நமக்கு மிக முக்கியமான நாடாகும். ஆனால் தற்போதுள்ள அந்நாட்டு அரசு நம்மிடம் அவ்வளவு சுமூகமாக நடந்துக்கொள்ளவில்லை. இந்தியா ஏராளமான உதவிகளை அந்நாட்டுக்கு செய்திருக்கிறது. குறிப்பாக, ஒரு ராணுவ விமானத்தை வழங்கி, அதை பராமரிப்பதற்கும் ராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருந்தது. இருப்பினும், அந்நிய நாட்டு ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் இருக்க கூடாது என்று மாலத்தீவு திருப்பி அனுப்பியது.
அதேபோல கடந்த 2023ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு வந்த கடல்சார் ஆராய்ச்சிக்கு தடையும் விதித்தது. இந்தியா இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததன் மூலம் ஏராளமான புதிய விஷயங்களை கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்புகள் மனித குல கண்டுபிடிப்புகளாகவே கருதப்பட்டதே தவிர, தன் பெயரை முன்னிறுத்தி நம் அரசு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. இருப்பினும் மாலத்தீவு இதற்கு தடை விதித்தது. தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் முகமது முய்சு, அதிபராக வந்ததிலிருந்து சீனாவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். இந்த நெருக்கம்தான் இந்தியா மீதான மாற்று பார்வைக்கு காரணம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விமர்சித்திருக்கின்றனர்.