பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நம் நாடு இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் நம் நாட்டின் பதிலடி தாக்குதல் நடந்த உடனே நேட்டோ நாடான துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் வார்னிங்காக பார்க்கப்படுகிறது. காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்'என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் துணை அமைப்பாகும். இந்நிலையில் தான் பஹல்காம் தாக்குதலுக்கு இன்று நம் நாடு அதிரடியாக பதிலடி தாக்குதல் நடத்தியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 5 பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தானில் செயல்பட்ட 4 பயங்கரவாத முகாம்கள் என்று மொத்தம் 9 இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அதன்படி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.
அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ளமெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.
இந்நிலையில் தான் நம் நாடு பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு எதிராக துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கி நேட்டோ அமைப்பின் உறுப்பினராக உள்ளது. அதுமட்டுமின்றி காஷ்மீர் விவகாரத்தை எடுத்து கொண்டால் துருக்கி எப்போதும் நம் நாட்டுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் தான் எடுத்து வரும். அந்த வகையில் தான் இந்த ‛அட்டாக்'கிலும் பாகிஸ்தான் பக்கம் துருக்கி சாய்ந்துள்ளது.
அதாவது இன்று காலையில் தாக்குதல் முடிந்த அடுத்த சில மணிநேரங்களில் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் பிடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்தாக் தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நம் நாடு நடத்திய துல்லியமான தாக்குதல் பற்றி துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் பிடன் கேட்டறிந்துள்ளார். இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
‛துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் பிடன், துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஸ்தாக் தாரை தொடர்பு கொண்டு பேசினார். பாகிஸ்தானின் இறையாண்மையை மீறி அப்பாவி மக்களை கொன்ற இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது பற்றி அவர் கவலை தெரிவித்தார்.
அதிகரித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் நெருக்கடியான நேரத்தில் இருநாடுகளும் ஒருங்கிணைப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார்'' என்றார். அதேபோல் இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான துருக்கி நாட்டின் தூதர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் தாரை சந்தித்து ஆதரவை தெரிவித்தார். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு நேரடியாக துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. அப்போது அவர் இறையாண்மையை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பக்கம் துருக்கி இருப்பதாக கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது.
இருநாடுகள் இடையே ராணுவம், வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் நல்ல உறவு உள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகும் கூட துருக்கி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி தான் வருகிறது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல் எதிர்ப்பு தெரிவித்த துருக்கி மறுபுறம் பாகிஸ்தானுக்கு தனது போர் கப்பலை அனுப்பி வைத்தது. அது கராச்சிக்கு சென்றது. அதேபோல் 6 போர் விமானங்கள் திடீரென்று பாகிஸ்தானில் தரையிறங்கியது. அதில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை துருக்கி முற்றிலுமாக மறுத்தது.
எரிபொருள் நிரப்பவே துருக்கி போர் விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நம் நாட்டின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த நடவடிக்கை என்பது நம் நாட்டுக்கு வார்னிங்காக பார்க்கப்படுகிறது. எனவே பாகிஸ்தான் - துருக்கி இடையேயான நடவடிக்கைகளை நம் உளவுத்துறை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.