பாகிஸ்தானுக்கு வந்த துருக்கி ராணுவ கப்பல்ஸ இந்திய உள்துறை அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு
05 May,2025
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.துருக்கி நாட்டின் கடற்படை கப்பல் ஒன்று பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு நேற்று வந்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாதளத்தில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், உள்ளூர் குதிரையோட்டி ஒருவர் உட்பட மொத்தம் 27 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
ராஜாங்க ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமின்றி, இரு நாடுகளும் போர் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி, இந்திய விமானப்படை விமானங்களான ரஃபேல், மிராஜ், சுகோய் என அடுத்தடுத்து உத்தரபிரதேச கங்கா விரைவு தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.
அதேபோல், லக்னோ-ஆக்ரா, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி இந்திய விமானப்படை ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த இரண்டு ஒத்திகைகளும் முற்றிலும் பகல் நேரத்திலேயே நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில், இன்று தொலைபேசி மூலம், பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் பேசினார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு என உறுதி அளித்துள்ளார்.
மறுபக்கம், கடந்த வாரம் துருக்கி நாட்டில் இருந்து ராணுவ சரக்கு விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்தன. அவற்றில் ஆயுதங்கள் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், எரிபொருள் நிரப்புவதற்காக வந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், துருக்கி நாட்டின் கடற்படை கப்பல் ஒன்று பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு நேற்று வந்துள்ளது. இந்தக் கப்பல் நல்லெண்ண அடிப்படையில் வந்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை இந்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களும் மே 7ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.