பஹல்காம் தாக்குதல் எதிரொலி | பாக்லிஹார் அணையிலிருந்து பாக். செல்லும் தண்ணீர் நிறுத்தம்
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் அருகே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ள காட்சி
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டதால் அந்த ஆற்றின் வழியாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரியாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “இது மிகப் பெரிய சாதனை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் நல்லது. நமது அரசாங்கம் பாகிஸ்தானுக்கு பல வழிகளில் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. நாங்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
தினேஷ் என்ற மற்றொரு உள்ளூர்வாசி, “பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை அரசாங்கம் நிறுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாகிஸ்தானின் பஹல்காமில் நமது சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதற்காக தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும். அரசு எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஜீலம் நதியிலிருந்தும் நிறுத்தம்.. இதேபோல், ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்தும் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத் உலமா-இ-ஹிந்த்-ன் தலைவர் அர்ஷத் மதானி, சிந்து நதி நீர் நிறுத்தத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். “யாராவது தண்ணீரை நிறுத்தினால், அதை நிறுத்தட்டும். இந்த ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் தண்ணீரை எங்கே கொண்டு செல்வீர்கள்? இது எளிதானது அல்ல. வெறுப்பின் ஆட்சியாக அல்லாமல், அன்பின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம், நான் இந்த நாட்டில் வாழ்கிறேன். ஆனால், இங்கு ஊக்குவிக்கப்படும் விஷயங்கள் நாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் உசேன், “இந்த அறிக்கையை நான் கண்டிக்கிறேன். இது மிகவும் ஆட்சேபனைக்குரிய அறிக்கை. பாகிஸ்தான் இரத்தக் குளியல் செய்யலாம், நாம் அவர்களுக்கான தண்ணீரைக் கூட நிறுத்தக் கூடாதா? இது என்ன மாதிரியான அறிவுரை? போர் கூடாது என்று அவர் கூறுகிறார்... ஜமியத் உலமா-இ-ஹிந்த் வெளியிட்ட அறிக்கைக்காக அந்த அமைப்பின் மீது முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கோபம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.