பாகிஸ்தான் பொருட்கள், கப்பல் போக்குவரத்துக்கு தடைவிதித்த இந்திய அரசு
03 May,2025
பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அரசு பல்வேறு வழிகளில் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை விதிப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு,
பாகிஸ்தான் பொருட்களின் ஏற்றுமதிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுமதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களில் மருந்துப் பொருட்கள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் முதன்மையாக இருந்த நிலையில், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு அவற்றின் இறக்குமதி மொத்த இறக்குமதியில் ஜீரோ புள்ளி 1 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.