இந்தியா சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
சிந்து நதி நீர் பகீர்வு ஒப்பந்தத்தை இந்திய ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்து. 1972 ஆம் ஆண்டு இரு நாடுகளும் கையெழுத்திட்ட சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு தற்போது இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. மேலும், சார்க் கூட்டமைப்பு நாட்டினருக்கான விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள், 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள், குடும்பம் குடும்பாக தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்கின்றனர். இதனிடையே, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தி உள்ளது. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்த நிலையில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தை தூண்டுவது, எல்லை தாண்டிய படுகொலைகள், சர்வதேச சட்டங்களை மீறுவது மற்றும் காஷ்மீர் குறித்த ஐநா தீர்மானங்களை பின்பற்றாதது ஆகியவற்றை நிறுத்தும் வரை, சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் இடைநிறுத்தம் செய்ய பாகிஸ்தான் உரிமை கொண்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகா எல்லையை உடனடியாக மூடுவது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் வழியாக இந்தியாவிலிருந்து எல்லை கடந்த அனைத்து பயணங்களும், விதிவிலக்கின்றிநிறுத்தப்படும்," என அறிவிக்கப்பட்டுள்ளது.