வங்கியில் மோசடி! தொழில் அதிபர் மெகுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது.. இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவாரா?
14 Apr,2025
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழில் அதிபர் மெகுல் சோக்ஷி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சோக்ஷி கைது செய்யப்பட்டுள்ளார். மெகுல் சோக்ஷிக்கு எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் மெகுல் சோக்சி. வைர வியாபாரியான இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றார். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போதே மெகுல் சோக்சி நாட்டை விட்டு வெளியேறினார். கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, அங்கு தஞ்சம் அடைந்தார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான மெகுல் சோக்ஷி, கடந்த மே மாதம் ஆன்டிகுவாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். தற்போது பெல்ஜியம் நாட்டில் இருக்கும் மெகுல் சோக்சி அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மெகுல் சோக்ஷி கைது செய்யப்பட்டதாகவும் தற்போது, சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் தனது உடல் நிலையை காரணம் காட்டி உடனடியாக அவர் ஜாமீன் கோரலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக பார்படா மற்றும் ஆண்டிகுவா நாட்டில் இருந்து வெளியேறிய மெகுல் சோக்ஷி பின்னர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் போனது.
பிறகு டொமினிக்கா நாட்டில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பெல்ஜியத்தில் அண்ட்வெர்ப் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. மெகுல் சோக்ஷியின் மனைவி பிரீத்தி சோக்ஷி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். எனவே, பெல்ஜியம் நாட்டில் ரெசிடன்ஸி கார்டு பெற்ற மெகுல் சோக்ஷி அங்கு வசித்து வந்த நிலையில் தற்போது இந்திய விசாரணை முகமைகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகுல் சோக்ஷியுடன் சேர்ந்து வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தற்போது லண்டனில் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மெகுல் சோக்ஷி சுவிட்சர்லாந்து, நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.