தாறுமாறாக தள்ளாடுது தங்கம் விலை
07 Apr,2025
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி விடுதலை நாள் அறிவிப்பில் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தினார். இதை அடுத்து உலகச் சந்தைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பலர் தேர்ந்தெடுத்ததால் தங்கத்தின் விலை உலக அளவில் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3038 டாலராக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் என்றால் 28.34 கிராம் ஆகும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் அவுன்ஸ் அடிப்படையிலேயே தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 394.69 ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்று இருக்கிறார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு உலக நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.
பின்னணி சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரி நாடுகளாக பார்க்கப்படும் நிலையில் இந்தியா, கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நட்பு நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் போரை தொடர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப்: குறிப்பாக கனடா, இந்தியா, மெக்சிகோ, சீனா உள்ளீட்டு நாடுகளுக்கு அந்த இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் அதே அளவு வரியை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினர். அந்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒயின், ஷாம்பெய்ன், ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதித்தார். தங்கம் விலை உயர்வு: இந்த நிலையில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி விடுதலை நாள் என்ற பெயரில் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால் உலகின் பல பணக்காரர்கள் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்தனர். இது ஒரு புறம் இருக்க உலக அளவில் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற நிலையில் தற்போது வரை 20 முறை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் புதிய உச்சம்: அந்த வகையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3038 டாலராக இருந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.3495 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 397.69 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் 97.67 டாலராகவும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 9065 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் 8,039 ரூபாயாகவும் இருக்கிறது. கத்தார் நாட்டில் 8,047 ரூபாயாகவும் (இந்திய மதிப்பில்), சவுதி அரேபியாவில் 8,115 ரூபாயாகவும், சிங்கப்பூரில் 8,419 ரூபாயாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 8157 ரூபாயாகவும் இருக்கிறது. தங்கம் முதலீடு: கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அதிகபட்சமாக தங்கத்தின் விலை 3077 டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்கத்தின் விலை லேசாக குறைந்திருக்கும் நிலையில் இன்னும் சில நாட்கள் வரை ஏற்ற இறக்கம் இருக்கலாம். அதே நேரத்தில் அதிகபட்சமாக சில நாட்களில் 3110 டாலர் என்ற அளவில் விலை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. எனவே தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிப்பது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
தங்கம் வெள்ளி நிலவரம்: தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 28.63 டாலராக இருந்திருக்கிறது. அதிகபட்சமாக 31.97 டாலராகவும், குறைந்தபட்சமாக 28.69 டாலராகவும் இருக்கிறது. ஒரு கிராமைப் பொருத்தவரை இந்தியாவில் 93.90 ஆகவும், ஒரு கிலோ 93 ஆயிரத்து 900 ரூபாயாகவும் இருக்கிறது. வரும் காலங்களில் வெள்ளியின் விலையும் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதும் குறைந்த அளவிலாவது தங்கத்தை வாங்கி வைப்பதும் எதிர்கால முதலீட்டுக்கு நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.