நம் நாட்டின் பெருநகரங்களில் ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை (பயணிகள்) ஈர்த்து வருகின்றன. அந்த நிறுவனங்களில் ஒன்றான உபர் நிறுவனம், சாலை பயண தாமத்தால் விமானத்தை தவற விட்ட பயணிக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்கு செல்வது மிகவும் முக்கியமானது. ஆனால் விமான நிலையத்துக்கு சவாரி செல்ல டாக்சி டிரைவர்கள் தயங்குவதாக உபர் நிறுவனத்துக்கு அதிகமான புகார்கள் வந்தது. இதனையடுத்து, தவறிய விமான இணைப்பு காப்பீடு திட்டத்தை உபர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டாக்ஸி ஒருங்கிணைப்பாளரான உபர் நிறுவனம் தற்போது தங்களது வாகனத்தில் பயணித்த பயணி, சாலை பயண தாமத்தால் விமானத்தை தவறவிட்டால் இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியீட்டுள்ள அறிக்கையில், சாலையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மும்பையில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானத்தை தவறவிட்ட பயணிக்கு, தவறிய விமான இணைப்பு காப்பீடு திட்டத்தின்கீழ்,
ரூ.7,500 வரை இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டால் ஓபிடி மற்றும் மருத்துவ செலவுகளை செலுத்துவதாக உபர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு உபர் நிறுவனம் கடந்த பிப்ரவரி இறுதியில்பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் Missed Flight Connection Cover என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின்படி, தனது பயணிகளுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.3 கூடுதலாக காப்பீட்டை வழங்குகிறது. டாக்ஸியை முன்பதிவு செய்யும்போது, சேருமிடம் விமான நிலையம் என்று குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே, Missed Flight Connection Cover திட்டத்தின்கீழ், பயணியால் இழப்பீடு கோர முடியும்.
மேலும், விமான நிலையத்துக்கு வருகை தரும் மதிப்பிடப்பட்ட நேரத்தை (90 நிமிடங்கள் முதல் 120நிமிடங்கள் வரை) கண்காணிப்பது பொருந்தும். ஒரு பயணி காப்பீட்டை பெற விரும்பினால், அவர்கள் கையொப்பிடமிட்ட கோரிக்கை படிவம், முன்பதிவு குறிப்பு எண் மற்றும் பயண விவரங்களை உரிமை கோரும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர, பயணிகள் விமான டிக்கெட்டின் நகல், பயணம் இல்லை என்பதற்கான சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் உறுதிப்படுத்துதல் மற்றும் பணத்தை திரும்ப பெறும சான்றிதழ், முன்பதிவு செய்யப்பட்ட புதிய விமானத்தின் அசல் டிக்கெட் மற்றும் NEFT பரிவர்த்தனைக்காக கிராஸ் செய்யப்பட்ட காசோலையையும் அதனுடன் சமர்பிக்க வேண்டும்.