இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்க அமெரிக்கா காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நம்முடன் சீரான வர்த்தகத்தை மேற்கொள்ள அயர்லாந்து முன்வந்திருக்கிறது. இது தொடர்பாக முக்கிய முடிவு இரு நாடுகள் தரப்பிலும் எடுக்கப்பட்டிருக்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
நேற்று அயர்லாந்தில் அந்நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சைமன் ஹாரிஸை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் உட்பட ஐரோப்பிய யூனியின் முக்கிய நாடுகளுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெய்சங்கர் சென்றிருக்கிறார். நேற்று முன்தினம் பிரிட்டன் சென்றிருந்த அவர், நேற்று அயர்லாந்து சென்றிருந்தார். அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அந்நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சைமன் ஹாரிஸுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், இந்தியா-அயர்லாந்து இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம் அமைக்க இரு நாடுகள் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், "இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, உறவை புத்துயிர் பெற செய்ய புதிய செயல் திட்டத்தை வகுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவின் அடிப்படையில், இந்தியா-அயர்லாந்து இடையே வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப தொடர்பை மேம்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம் அமைக்க இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அயர்லாந்தின் துணை பிரதமர் கூறுகையில், "இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு கூட்டு பொருளாதார ஆணையம் சிறப்பான வாய்ப்பு. தற்போது அயர்லாந்து-இந்தியா இடையே ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவே பொருளாதார ஆணையம் அமைக்கப்பட்டால், இந்த வர்த்தகம் அதிகரிக்கும். அதிக முதலீடுகள் வரும்" என்று தெரிவித்திருக்கிறார்.
அயர்லாந்து-இந்தியாவின் இந்த கூட்டு முயற்சி நாம் எதிர்பார்ப்பதை விட அதிக பலன் கொடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். காரணம் அமெரிக்காதான். அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் முட்டிக்கொண்டிருக்கிறது. உக்ரைன் விஷயத்தில் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கழற்றிவிட்டிருக்கிறார். போருக்கு தேவையான நிதி எதையும் தரமாட்டோம் என்று கூறிவிட்டார். இதனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் கொந்தளிப்பில் இருக்கின்றன.
அமெரிக்காவுடன் யாரும் அண்ணம் தண்ணி பழக கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு இந்த கொந்தளிப்பு சென்றிருக்கிறது. வர்த்தகத்திற்கு அமெரிக்காவை விட்டா வேறு நாடுகளே கிடையாதா? மற்ற நாடுகளிடம் வர்த்தகம் செய்வோம் என ஐரோப்பிய நாடுகள் கிளம்பியுள்ளன. இப்படி கிளம்பிய நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று. இதன் அடிப்படையில்தான் அயர்லாந்துக்கும்-இந்தியாவுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஏற்கெனவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பாக அமெரிக்கா யோசித்து வருகிறது. எனவே வர்த்தகம் செய்ய நமக்கும் மாற்று நாடுகள் தேவை. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல இப்போதைக்கு ஐரோப்பிய யூனியனுடன் நாம் கூட்டு சேர தொடங்கியுள்ளோம். நமக்கு ஐரோப்பிய யூனியன் எந்த அளவுக்கு தேவையோ.. அதைவிட அதிகமாக அவர்களுக்கு இந்தியா தேவை. எனவே எப்படி பார்த்தாலும் நமக்குதான் லாபம் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவிலிருந்து உணவு பொருட்கள், மருந்துகள், ஆடை, தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்றவை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கிருந்து உற்பத்தி இயந்திரங்கள், வாகனங்கள், ரசாயன பொருட்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இறக்குமதியாகிறது. 2023-24 ஆம் ஆண்டில், இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இனி இந்த வர்த்தக உறவு மேலும் வலுவடையும், வர்த்தக மதிப்பும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது