அமெரிக்காவில் இந்திய நர்ஸ் மீது நோயாளி தாக்குதல்: கண் பார்வை பறிபோகும் அபாயம்
06 Mar,2025
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நர்ஸ் மீது நோயாளி தாக்கியதில் கண் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் பாம்ஸ் வெஸ்ட் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிபவர் லீலாம்மா பால். இவர் மனநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை கவனித்து வந்தார். அப்போது சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டீபன் எரிக் ஸ்கான்டில்பரி(33) என்பவன் திடீரென லீலாம்மா முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளான்.
இந்தியர்கள் மோசம் என்று கூறி ஆபாசமான வார்த்தைகளை பேசிய அவன் கடுமையாக தாக்கியதில் முகத்தில் உள்ள எலும்புகள் முறிந்து விட்டன. இதனால் அவரது இரண்டு கண்களிலும் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தாக்குதலை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய ஸ்டீபனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் வெறுப்புணர்வு குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.