வங்கதேசத்தில் வேலையை காட்டும் ராணுவம்.... வார்னிங் செய்த தளபதி! என்ன நடக்கிறது
28 Feb,2025
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அங்கு இடைக்கால அரசு ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. ஆனாலும் அங்கு முழுமையான இயல்பு நிலை திரும்பிய பாடில்லை. இதற்கு மத்தியில் வங்கதேச ராணுவ தளபதி, நாடு அபாயத்தில் உள்ளதாக எச்சரித்து இருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை எற்பட்டது. இதையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா,
இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். 6 மாதமாகியும் திரும்பாத இயல்புநிலை இதையடுத்து, வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. முகம்மது யூனுஸ் ஆட்சியில் வங்கதேசத்தில் பொற்காலம் பிறக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறினர். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களை கடந்த போதும் அங்கு இன்னமும் இயல்பான நிலை திரும்பவில்லை என்று சொல்லும் அளவுக்குதான் நிலைமை உள்ளது. போதாக்குறைக்கு ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான உறவை வங்கதேசம் கடைபிடித்து வந்த நிலையில்,
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதுமட்டும் இன்றி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தற்போது வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வங்கதேசத்தை சீர்குலைக்க முயற்சி வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நீடித்து வருவதாக, ஷேக் ஹசீனா கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது ஒருபக்கம் என்றால் நடப்பு பிப்ரவரி மாதத்தில், குற்ற செயல்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. இதற்காக ஆபரேஷன் டெவில் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை வங்கதேசம் பாதுகாப்பு படை மேற்கொண்டது. இதன்படி, கடந்த 3 வாரத்தில் மட்டும் 8,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டை சீர்குலைக்க இவர்கள் ஈடுபட்டதாக வங்கதேச இடைக்கால அரசு கூறியது.
இதற்கிடையே தான், வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் உ சமா, நாட்டில் மிக தீவிரமான பிரச்சினை நிலவுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெனரல் ஜமான் கூறியதாவது:- காவல்துறை திறனற்றதாக உள்ளது "நாட்டில் அராஜகத்தை பார்த்து வருகிறோம். காவல்துறை திறனற்றதாக உள்ளது. உயர் பொறுப்பில் இருந்து கடை நிலையில் உள்ள போலீசார் வரை அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் போலீஸ்காரர்களுடன் பணியாற்றியவர்கள் நீதிமன்ற வழக்குகள் அல்லது சிறைச்சாலையில் உள்ளனர். சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் உட்பூசல்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
வேறுபாடுகளை கடந்து செல்லவில்லை என்றாலோ, தொடர்ந்து உங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டாலோ, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என நான் உங்களை எச்சரிக்கிறேன். எனக்கு வேறு ஒரு எந்த விருப்பமும் இல்லை. கடந்த ஆறு முதல் 8 மாதங்கள் போதுமானதாக இருந்தது. சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழல் பிரச்சினையை தீர்க்க வேண்டியவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு இருப்பது, சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கி கொடுக்கிறது. எதில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்று கூறினார். எந்த ஒரு கட்சியையும் குறிப்பிடாமல் இவ்வாறு அவர் மறைமுகமாக பேசினார்.
வங்கதேச ஆட்சியாளர்கள் மீது வெளிப்படையாக ராணுவ தளபதி குற்றம் சாட்டியிருக்கும் வகையில் பேசியது அந்த நாடு மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தை நோக்கி செல்கிறதா? என்ற கேள்வி எழாமலும் இல்லை என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.