அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் ‘கோல்டு கார்டு’ விசா வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே, குடியுரிமை விஷயத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார்.
ஓவல் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்த டிரம்ப், கோல்டு கார்டு விசா திட்டத்தை தொடங்கி வைத்து, நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அவர் கூறுகையில்,‘‘வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து தங்குவோருக்கான கோல்டு கார்டு திட்டம் கொண்டு வரப்படுகிறது. திட்டத்தின்படி 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹43 கோடி) செலுத்துவோருக்கு கோல்டு கார்டு வழங்கப்படும். நடைமுறையில் இருக்கும் கிரீன் கார்டுகளில் இருக்கின்ற வசதிகளுடன், கூடுதலாக பிற சலுகைளுடன் கோல்டு கார்டு உருவாக்கப்படும்.
இன்னும் 2 வாரங்களில் இது தொடங்கப்படும். கோல்டு கார்டு திட்டமானது, தற்போதுள்ள ஈபி-5 விசாவுக்கு மாற்றானது. ஈபி-5 திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் 1 மில்லியன் டாலர் (ரூ.8.71 கோடி) முதலீடு செய்யலாம். காலப்போக்கில் அவர்கள் கிரீன் கார்டுகளைப் பெறலாம். கோல்டு கார்டுகளுக்காக வசூலிக்கப்படும் பணமானது, நேரடியாக கருவூலத்திற்கு சென்றுவிடும்.
நாளடைவில் ஈபி-5 திட்டம் நிறுத்தப்படும். கோல்டு கார்டு திட்டத்தின் கீழ், செல்வந்தர்கள் இந்த கார்டுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு எளிதாக வாழமுடியும். இத்திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு வரி வருவாய் கூடுகிறது. அதேசமயம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ஈபி-5 திட்டமானது முட்டாள்தனமானது. மோசடிகளால் நிறைந்திருந்துள்ளது. அபத்தமான ஈபி-5 திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். அதேநேரம் இத்திட்டத்தை கோல்டு கார்டு திட்டமாக மாற்றவுள்ளோம்’’ என்றார்.
டிரம்ப் திட்டம் எல்லாம் வணிகம் தான்ஸ
அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாமே வணிகத்தை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. கோல்டு விசா திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக 1 கோடி கோல்டு விசா விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் பேட்டியில் கூறுகையில்,இந்த கார்டு மூலம் பணக்காரர்கள்தான் அமெரிக்காவுக்கு வருவார்கள். பணக்காரர்கள் என்பதால் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவார்கள்.ஏராளமாக செலவு செய்வார்கள், அதிக வரியும் கட்டுவார்கள், பலருக்கும் வேலை வாய்ப்பு அளிப்பார்கள் என்று கூறினார்.
இந்திய வம்சாவளி பிரமுகர் வேதனைஸ.
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான அஜய் புட்டோரியா,‘‘அமெரிக்காவுக்கு குடிபெயர்வதில் ஏற்பட்டு வரும் பிரச்னைகளால் அதில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். இந்த நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு கோல்டு கார்டு விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கவலையடைந்துள்ளோம்.
ஏற்கனவே பல ஆண்டுகள் இங்கு பணிபுரிந்து அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் முயற்சித்து வருகின்றனர். நிலைமை அவ்வாறு இருக்க பெரிய தொகை கொடுத்து கோல்டு விசா வாங்கும் திட்டத்தால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக இந்தியர்களின் கன்னத்தில் விடப்பட்ட அறையாகதான் இது கருதப்படுகிறது. நாட்டுக்காக உழைத்து, புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, வரிகளை செலுத்தி,தங்களுடைய வாழ்க்கையை அமெரிக்காவுக்காக செலவிட்டவர்களுக்கு இதில் எந்த நன்மையும் கிடைக்காது. அதற்கு பதிலாக பணமூட்டைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது போல் இருக்கிறது என்றார்.
இந்தியர்கள் பாதிக்கப்படுவர்
இந்த திட்டத்தினால் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில், அதிக வசதி படைத்தவர்கள் மற்றும் மிக பெரிய தொழிலதிபர்களால் தான் கோல்டு கார்டு வாங்கி அந்த நாட்டின் பிரஜை ஆக முடியும். ஆனால்,விசாவுக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக கிரீன் கார்டுக்கு காத்திருக்கும் சாப்ட்வேர்துறை தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
ஈபி-5 விசாவுக்கு கடன் அல்லது நிதியை திரட்டி விண்ணப்பிக்க முடியும். கோல்டு கார்டு விசாவுக்கு முழு தொகையும் முதலில் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. இதனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு கோல்டு கார்டு விசா என்பது எட்டாக்கனியாக மாறும்.