ரூ.86 ஆயிரம் கோடியில் காற்றாலை மின் உற்பத்தி இலங்கை திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகல்
14 Feb,2025
கோதபய ராஜபக்ச இலங்கை அதிபராக இருந்த போது கடந்த 2022ல் இலங்கையின் வடக்குப்பகுதியில் தொடங்கப்பட இருந்த ரூ.86 ஆயிரம் கோடி மதிப்பிலான காற்றாலை மின் உற்பத்தி திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கு இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடின. இந்த சூழலில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தார். இந்தநிலையில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
அதில்,’ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவினை இலங்கை அரசு நியமித்துள்ள நிலையில், இலங்கையின் இறையாண்மை மற்றும் அதன் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஏற்கனவே கூறப்பட்ட திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், அதை பயனர்களுக்கு எடுத்துச் செல்ல டிரான்ஸ்மிட்டிங் லைன்களை அமைப்பதற்கும் உள்ள திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் முற்றிலும் விலகி உள்ளது. இருப்பினும் இலங்கை அரசு விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புக்கு தயாராக உள்ளதாக அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் கொழும்பு துறைமுகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது.