காஷ்மீரில் களமிறங்கிய ஹமாஸ்.. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சதி
07 Feb,2025
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைகோர்த்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய மாநாட்டில் காஷ்மீரை கைப்பற்ற இந்தியாவை துண்டு துண்டாக்குவோம் என்று சூளுரைத்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே பாகிஸ்தான் தான். நம் நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமின்றி காஷ்மீரை கைப்பற்றுவதாக கூறி பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் கட்டவிழ்த்து வருகிறது.
இதற்கு உரிய முறையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் மட்டும் திருந்தவேயில்லை. தொடர்ந்து காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு காஷ்மீரை மீட்போம் என்று கூறி நம் நாட்டிடம் மூக்கை உடைத்து கொள்கிறது. இப்படியான சூழலில் தான் தற்போது பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி என்பது பாகிஸ்தானில், ‛காஷ்மீர் ஒற்றுமை தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நாளையொட்டி பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்து இருக்கும் ராவலகோட்டை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தம்பி தால்ஹா சயிப், ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் தலைவர் அஹார் கான் காஷ்மீரி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் மசூத் இலியாஷ் உள்பட பயங்கரவாத அமைப்பினர் பங்கேற்றனர்.
அதோடு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரும் பங்கேற்றார். பாலஸ்தீனத்தின் காசாவில் இந்த ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2013 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் 1000க்கும் மேற்பட்டவர்களை கொன்று பெண்கள், ஆண்கள் என்று பலரையும் சிறைப்பிடித்து சென்றனர். இதையடுத்து காசாவில் இஸ்ரேல் போர் தொடங்கியது. இந்த போர் தற்போது காசாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் இந்த மாநாட்டில் ஹமாஸ் தலைவர் பங்கேற்றுள்ளார். ஹமாஸ் அமைப்பின் ஈரான் பிரதிநிதி காலித் அல் கடூமி பங்கேற்றார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த மாநாட்டுக்கு ‛காஷ்மீர் ஒற்றுமை மற்றும் ஹமாஸ் ஆபரேஷன் ‛அல் அக்சா ரத்தம்' (Kashmir Solidarity and Hams Operation ‛Al Aqsa Flood')'என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ‛அல் அக்சா ரத்தம்' என்ற வார்த்தை என்பது 2013 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆபரேஷனின் பெயர் என்பதாகும். இதன்மூலம் காஷ்மீர் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் களமிறங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அதோடு காஷ்மீர் விவகாரம் தொடர்பான மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நிர்வாகி ஒருவர் பங்கேற்று இருப்பது இதுதான் முதல் முறை.
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் அவர்கள் பேசியுள்ளனர். குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக அவர்கள், ‛‛காஷ்மீர் என்பது பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதனை இந்தியாவிடம் இருந்து கைப்பற்றுவோம். காஷ்மீரை கைப்பற்ற இந்தியாவை துண்டுதுண்டாக்குவோம்'' என்று கூறியுள்ளனர். இத்தகைய பேச்சுகள் என்பது நம் நாட்டுக்கு வார்னிங்காக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு உடனடியாக சுதாரிக்க வேண்டும். ஏனென்றால் இந்த மாநாட்டில் பங்கேற்ற லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நம் நாட்டில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய குற்றப்பின்னணியை கொண்டவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றில் இந்த பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.