கனடாவின் அடுத்த பிரதமராகப்போவது யார்.. ரேசில் இருக்கும் ஜக்மீத் சிங்! யார் இவர்?
07 Jan,2025
கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக யார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்ற யூகங்கள் அதிகரித்துள்ளன. இந்த லிஸ்டில் மூன்று பேரது பெயர்கள் அடிபடுகின்றன. இதில் குறிப்பிடத்தக்க நபராக ஜக்மீத் சிங் உள்ளார். இவருக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி இங்கே பார்க்கலாம். கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சொந்த கட்சியில் இருந்து எழுந்த எதிர்ப்பு மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் வாங்குவதாக கூறியதால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ட்ரூடோ அறிவித்து இருக்கிறார். அடுத்த பிரதமர் யார்? ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து இருப்பதால் பிரதமர் பதவி காலியாக உள்ளது. இதனால், கனடாவில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிரிப்டோ கணிப்புகளை வெளியிடும் தளமான பாலிமார்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பியார்ரே பொல்லிவ்ரே பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
பாலிமார்கெட் கணிப்பு இவர்கள் தவிர கிரியாஸ்டியா ப்ரீலேண்ட் மற்றும் ஜக்மித் சிங்க் ஆகியோரும் இந்த ரேசில் உள்ளனர். பாலிமார்கெட் கணிப்பு படி கிறிஸ்டியா பிரீலேண்டிற்கு 5 சதவிதம் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ளது. லிபரல் கட்சியின் தலைவராக இவர் தேர்வு ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஜக்மித் சிங்கிற்கும் 2 சதவிகித வாய்ப்புள்ளதாக பாலிமார்க்கெட் கணித்துள்ளது. தற்போது தேசிய ஜனநாயகட்சியின் தலைவராக இவர் உள்ளார். கனடாவில் ட்ரூடோ அரசுக்கு இந்த கட்சியே ஆதரவாக இருந்தது.
யார் இந்த ஜக்மீத் சிங்?
கனடாவில் உள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், ட்ரூடோ அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார். நாடாளுமன்றத்தில் ட்ரூடோ அரசு கொண்டு வரும் மசோதக்களுக்கு இவரது கட்சியே ஆதரவாக வாக்களித்து மசோதா நிறைவேற ஆதரவாக இருந்தது. ஜக்மீத் சிங் காலிஸ்தான் ஆதரவு தலைவராக அறியபடுகிறார். கனடாவில் உள்ள 2 சதவிகித சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர் ஜமீத் சிங்.
இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் அமிர்தசரஸ் வர திட்டமிட்டு இருந்தார். ஆனால் இவருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது. 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கீயர்கள் கலவரத்தை இனப்படுகொலை என இவர் கூறியதால் இவருக்கு விசா மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு கருத்துக்களையே இவர் கூறி வந்து இருக்கிறார்.
ஜக்மித் சிங் 1979 ஆம் ஆண்டு ஒண்டோரியாவில் உள்ள ஸ்கேர்போராவில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் ஹர்மீத் கவுர் மற்றும் ஜெகதரன் சிங் ஆகியோர் ஆவர். இவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.