“டெல்லியில் ஆபரேஷன் லோட்டஸ் மூலம் வாக்காளர்களை நீக்கும் பாஜக” - கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
29 Dec,2024
புதுடெல்லி: பாஜக கட்சி தேசிய தலைநகரில் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், ஆபரேஷன் லோட்டஸ் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதாகவும் டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் பாஜக அதன் தோல்வியை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை. தொலைநோக்குப் பார்வை இல்லை. நம்பிக்கையான வேட்பாளர்கள் இல்லை. எப்பாடுபட்டாவது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்களார் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது போன்ற நேர்மையற்ற வழிமுறைகளை கையாளத் தொடங்கிவிட்டது.
எனது புதுடெல்லி தொகுதியில் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஆபரேஷன் லோட்டஸ் செயலில் உள்ளது. 5,000 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 7,500 வாக்காளர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1
ஷாதாராவில் மட்டும் 11,800 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் தலையீட்டால் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் புதுடெல்லியில் செய்த சுருக்க திருத்தத்தில் புதிதாக 1 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். என்றாலும் பாஜகவின் வாக்காளர் பட்டியலில் 12 சதவீத முறைகேடு குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.” என்று தெரிவித்தார்.
மேலும், “ஒரு தொகுதியில் முறையே 2 மற்றும் 4 சதவீதங்களுக்கு அதிகமாக வாக்களார்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் நடந்திருந்தால் தேர்தல் பதிவு அதிகாரிகள் அதனை ஆழமாக சரிபார்க்க வேண்டும். எந்த அரசியல் அழுத்தத்துக்கும் அடிபணியாமல் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அந்த கோப்புகளில் உங்கள் கையெழுத்து பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். தவறாக எதுவும் செய்ய வேண்டாம். பின்னர் அதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார்.