பாகிஸ்தானுக்கு ஜே-35 ரக 40 போர் விமானத்தை வழங்கும் சீனா? சிக்கலில் இந்தியா
24 Dec,2024
இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானால் தற்போது நம் நாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் தனது விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் சீனாவிடம் இருந்து 40 ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 என்று அதிநவீன வசதி கொண்ட போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும் பிரச்சனை உள்ளது. நமக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருவது தான் பிரச்சனைக்கு காரணம். அதோடு பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிரான தீவிராவாத செயல்களை கட்டவிழுத்து விடுகிறது. அதேபோல் அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் சுமூகமான உறவு என்பது இல்லை. இதற்கு சீனா தான் காரணம். நம் நாட்டின் எல்லையில் உள்ள நம் பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி பெயர்களை மாற்றி வருகிறது. அதோடு எல்லையில் பல சமயங்களில் நம் நாட்டு ராணுவ வீரர்களுடன் சீனா மோதி உள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசல் உள்ளது.
மோடி? இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது விமானப்படையை பலப்படுத்தும் வகையில் சீனாவிடம் இருந்து 40 அதிநவீன போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் விமானப்படை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி சீனாவிடம் இருந்து ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க உள்ளது. தற்போது வரை இந்த விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு பின்னணியில் சீனா தான் இருக்கிறது. சீனா நிச்சயம் பாகிஸ்தானுக்கு ஸ்டெல்த் பைட்டர்
ஜே - 35 ரக போர் விமானங்களை வழங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு, சீனா நாட்டின் மத்திய மிலிட்டரி கமிஷனின் துணை தலைவர் ஜென் ஜங்க் சென்று இருந்தார். சீனாவை பொறுத்தவரை ராணுவத்தின் தலைவராக அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் தான் இந்த ஜென் ஜங்க். அப்போது ஜென் ஜங்க், பாகிஸ்தானின் ராணுவ தலைவர் ஜெனரல் அசீம் முனீருடன் ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்தி இருந்தார். அப்போது இருநாடுகளின் ராணுவ உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டன. அதோடு பாகிஸ்தானின் முப்படைகளையும் நவீனப்படுத்த சீனா தொடர்ந்து உதவி வருகிறது. அதோடு சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து ஜே 17 தண்டர் போர் விமானத்தை உருவாக்கி இருந்தது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சீனா, பாகிஸ்தானுக்காக 3 போர் கப்பல்களை வழங்கியது. இந்த கப்பல்கள் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் தற்போது சீனாவிடம் இருந்து ஸ்டெல்த் பைட்டர் ஜே -35 ரக விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த போர் விமானங்களை சீனா தான் தற்போது வரை பயன்படுத்தி வருகிறது. இந்த ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 ரக விமானங்களை இதுவரை சீனா பிற நாடுகளுக்கு வழங்காத நிலையில் முதல் முறையாக பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டுள்ளது. சீனாவில் இந்த விமானம் என்பது 5வது தலைமுறை விமானம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுதான் தற்போது இந்தியாவுக்கு தலைவலியாக மாறி உள்ளது. எப்படி என்று பார்த்தால் பாகிஸ்தானின் விருப்பத்தை சீனா நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ஸ்டெல்த் பைட்டர் ஜே -35 ரக விமானங்கள் அந்த நாட்டுக்கு வழங்கப்படும். இந்த புதிய விமானங்கள் தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள பழைய அமெரிக்கன் எஃப் 16 ரக போர் விமானம் மற்றும் பிரான்ஸ் மிரஜ் விமானங்களுக்கு பதிலாக சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த விமானங்களை காட்டிலும் சீனாவின் ஸ்டெல்த் பைட்டர் ஜே - 16 ரக போர் விமானங்கள் நவீனத்துவமானவை. அதாவது இந்த ஜே - 35 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்களின் வடிவங்களை ஒத்திருக்கும். இருப்பினும் உருவத்தில் சின்னசின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எஃப் 35 ரக விமானத்தை விட ஜே 35 ரக விமானங்கள் சற்று அகலமானது. அதேபோல் மாக் 1.6 என்ற வேகத்தில் அமெரிக்காவின் எப்ஃப் 35 ரக விமானங்கள் செல்லும். ஆனால் சீனாவின் ஜே -35 அதை விட அதிக செயல்திறன் கொண்டது. அதாவது மாக் 2.0 வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது. ஆனால் அமெரிக்காவின் எஃப்35 ரக விமானம் நிற்காமல் 2,220 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். அதை ஒப்பிடும்போது சீனாவின் ஜே 35 ரக விமானம் 1,200 கிலோமீட்டர் வரை மட்டுமே நிற்காமல் பயணிக்க முடியும். இருப்பினும் தற்போது பாகிஸ்தானில் உள்ள போர் விமானங்களை காட்டிலும் சீனாவின் ஜே -35 ரக விமானங்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும்.
இதற்கிடையே தான் இந்தியாவை மிரட்டும் வகையில் பாகிஸ்தானும், சீனாவும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இத்தகைய சூழலில் 40 போர் விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்கும்போது அது அந்த நாட்டுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இருப்பினும் இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது என்றால் அதன் பின்னணியில் சீனா இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் விவகாரத்தில் மோதல் தொடர்ந்து வருகிறது. அதேபோல் சீனாவுக்கும் நம் நாட்டுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இதனால் நம் நாட்டை மிரட்டும் வகையில் சீனா முதல் முறையாக பாகிஸ்தானுக்கு ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 ரக விமானங்களை வழங்க முடிவு செய்யலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அப்படி சீனா போர் விமானங்களை வழங்கும்பட்சத்தில் அது நம் நாட்டுக்கு புதிய தலைவலியாக அமையும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.