கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்திற்கான, கட்டுமான பணிகளுக்கு, அமெரிக்காவின் கடன் உதவியை பயன்படுத்த போவதில்லை என அதானி குழுமம் அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்கா இன்னமும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் ஒரு பக்கத்தில் இது, அமெரிக்காவுக்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது என்றாலும், மறுபக்கத்தில் சிக்கலையும் தோற்றுவித்திருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய திட்டம், கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை, இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், அந்தத் திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றி விட்டார்.
இது இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகளில், குறிப்பிடத்தக்க ஒரு இடைவெளியும் ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடி அதிகரித்த போது, இந்தியாவுக்கு மேற்கு கொள்கலன் முனைய திட்டத்தை வழங்கி, புதுடெல்லியுடன், சமரசம் செய்து கொள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
ஆனாலும், இந்திய அரசாங்கம் இதில் நேரடியாகச் சம்பந்தப்பட விரும்பவில்லை.
அதனால் இந்திய பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்களில் ஒருவரும், உலக செல்வந்தர்களில் ஒருவருமான கௌதம் அதானியின், அதானி குழுமத்திடம் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.
கொள்கலன் முனையத்தை உருவாக்கி, இயக்கி, ஒப்படைக்கும் வகையிலான திட்டம் இது.
இந்தத் திட்டத்தை அதானி குழுமம் தனியாக முன்னெடுக்கவே திட்டமிட்டிருந்தது.
அதானி குழுமத்தை பொருத்தவரையில் இந்தத் திட்டத்தை தனித்து நிறைவேற்றுவதற்கு போதுமான நிதியை கொண்டிருக்கின்றது.
அதானி குழுமத்தை சேர்ந்த ‘அதானி போர்ட்’ நிறுவனம் இந்தியாவில் 13 முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் முனையங்களையும் செயற்படுத்துகிறது.
இந்தியாவின் 24 சதவீதமான துறைமுக கொள்திறனை இந்த நிறுவனமே கையாளுகிறது.
அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, 700 மில்லியன் டொலர் செலவில் மேற்கு கொள்கலன் முனையத்தை உருவாக்கி நிர்வகிப்பது என்பது சிரமமான ஒன்று அல்ல.
அப்படி இருந்தும் இந்தத் திட்டத்திற்குள் கடந்த ஆண்டு அமெரிக்கா காலடி எடுத்து வைத்தது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதி நிறுவனம் 553 மில்லியன் டொலர்களை இந்த திட்டத்திற்காக, கடனாக வழங்குவதாக கடந்த ஆண்டு அறிவித்தது.
இது யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒரு விடயம்.
ஏனென்றால், இலங்கைக்கு அமெரிக்கா இந்தளவு பெரிய நிதி திட்டத்தை இதற்கு முன் வழங்கியதில்லை.
இந்த நிதியை இலங்கைக்கு கடனாக கொடுக்க முன்வந்த அமெரிக்கா, அதனை நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கொடுக்கவும் தயாராக இருக்கவில்லை.
அதனால் தான், அதானி குழுமத்திடம், அந்த கடனை கொடுத்து, இந்தத் திட்டத்தில் பங்காளியாக இணைந்து கொள்ள அமெரிக்கா முனைந்தது.
இதன் மூலமாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத் திட்டத்தில் தானும் ஒரு பங்காளியாக அமெரிக்கா சேர்ந்து கொண்டது.
இலங்கைக்கு அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளில் அதிகளவு கொடைகளையும் நிதி உதவிகளையும் வழங்கி இருந்தாலும் ஒரேயடியாக 500 மில்லியனுக்கும் அதிகமான டொலர்களை வழங்குவது புதிய ஒரு விடயமாக பார்க்கப்பட்டது.
இதன் ஊடாக அமெரிக்கா பல நோக்கங்களை அடைய திட்டமிட்டது.
இலங்கைக்கு உதவ வேண்டும், அதேவேளை, அந்த நிதி இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக வழங்கப்படக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியது.
அவ்வாறு வழங்கப்பட்டால் அது அந்த கடனை மீள பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை அமெரிக்கா கவனத்தில் கொண்டது.
அதனால் தான் மிக மிகப்பெரிய முதலீட்டாளரான அதானி குழுமத்திற்கு அந்த கடனை கொடுத்து உதவ அமெரிக்கா முன்வந்தது.
அமெரிக்காவின் இந்த கடன் அதானி குழுமத்திற்கு முக்கியமானதாக இல்லாவிட்டாலும் அமெரிக்காவை ஒரு பங்காளியாக இணைத்துக் கொள்வது அதானி குழுமத்தின் நன்மதிப்பை உயர்த்த கூடியதாக இருந்தது.
அதனால் அந்த நிறுவனமும் அதற்கு இணங்கியது.
இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால் ஒரே நேரத்தில் அதானி குழுமம் – அமெரிக்கா- இலங்கை என முத்தரப்புகள் ஒரு இணக்க சூழலுக்குள் வந்திருக்கும்.
ஆனால், அவ்வாறு நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறை திணைக்களம் அதானி குழுமத்திற்கு எதிராக தொடர்ந்திருக்கும் வழக்குதான் அதற்கு காரணம்.
இந்தியாவில் எட்டு மாநிலங்களில் மின்சாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, மாநில அதிகாரிகளுக்கு பெரியளவில் இலஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமம் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
அவ்வாறு பெறப்பட்ட திட்டங்களில், அமெரிக்க முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்திருக்கிறார் அதானி என்பதே குற்றச்சாட்டு.
யார் யாரிடம் இலஞ்சம் பெற்றது என்பதை விட, இதில் முறைகேடு இடம்பெற்றிருக்கிறது என்பது தான் பிரதான பிரச்சினை.இந்த வழக்கில் அதானியை கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது. ஆனாலும் அது இன்னமும் தீர்வு காணப்பட முடியாத சிக்கலாக நீண்டு கொண்டிருக்கிறது.
அதானி குழுமத்திற்கு 553 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கும் அறிவிப்பு அமெரிக்கா வெளியிட்ட போதே, இந்த வழக்கு விசாரணைகள் தொடங்கியிருந்தன.
அதானிக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதானி குழுமத்திற்கு அமெரிக்கா கடன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
இந்த குற்றச்சாட்டை காரணமாக வைத்து அமெரிக்கா அந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால், இந்த விடயத்தில் அதானி குழுமம் முந்திக் கொண்டிருந்தது.
தங்களுக்கு அந்த நிதி வேண்டாம், தாங்கள் அந்த கடனை பெற்றுக் கொள்ளாமலேயே சொந்தமாக இந்த திட்டத்தை முன்னெடுக்க முடியும் என அறிவித்திருக்கிறது.
இது அதானி குழுமம் அமெரிக்காவுக்கு வைத்திருக்கின்ற ஒரு ‘செக்’ என்றும் கூறலாம்.
இந்த கடன் உதவியின் மூலம் கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்கா தனது செல்வாக்கையும் நிலைநிறுத்த முற்பட்டது. அந்த முயற்சி இப்பொழுது முட்டுக்கட்டைக்கு உள்ளாகியிருக்கிறது. இது ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு வகையில் நிம்மதி.
அமெரிக்கா இந்த விடயத்தில் குடைச்சல் கொடுக்கும் நிலையில் இருப்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்பாது. அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறது.
அண்மையில் கொழும்புக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டொனால்ட் லூ ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியே முக்கியமாக பேச்சு நடத்தி இருந்தார்.
அனுரகுமார திசநாயக்க அரசாங்கத்துடன் அமெரிக்கா முதல் கட்டமாக இந்த வகையில் தான் தொடர்புகளை வலுப்படுத்த விரும்புகிறது.
இதன் ஊடாக அடுத்த கட்டத்திற்குள் நகர அமெரிக்கா திட்டமிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில், அதானி குழுமத்திற்கு கடன் உதவி வழங்குவது அமெரிக்காவுக்கும் சிக்கலான ஒன்று. குற்றம்சாட்டி விட்டு அவருக்கே கடனுதவியை கொடுப்பது எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.
அதனால் இந்த திட்டத்தில் இருந்து அதானி குழுமம் விலகிக் கொண்டதை அமெரிக்காவுக்கும் கூட உள்ளூர ஒரு திருப்தி தான். அதேவேளை, கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத் திட்டத்தில், அமெரிக்காவின் கடன் முதலீடு இப்போது கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அமெரிக்கா இந்தத் திட்டத்திற்காக அறிவித்த 553 மில்லியன் டொலர்களை என்ன செய்யப் போகிறது? திரும்ப பெற்றுக் கொள்ளுமா? அல்லது வேறு திட்டத்திற்காக வழங்கமா ? இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக கொடுக்க முன்வருமா?