இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் லிபரல் கட்சியை சேர்ந்தவர். ஜஸ்டின் ட்ரூடோ நம் நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
அதோடு ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை நம் நாட்டின் மீது கூறி வருகிறார். இதற்கு நம் நாடும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளார். அதோடு அடுத்த ஆண்டு கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்.
இவருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையே மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கனடா பொருளாதாரம் தொடர்பான கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். தற்போது அவரது சொந்த கட்சியினரே எதிராக கிளம்பி உள்ளனர். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் தற்போதைய சூழலில் முன்கூட்டியே தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாக என்ற தகவல் வெளியாகி உள்ளது. துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது கேபினட் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களிடம் அதுபற்றி விரிவாக விவாதித்துள்ளார். தற்போது தனக்கு எதிரான நிலவும் மக்களை சமாதானப்படுத்தவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவை பெறும் திட்டத்தில் அவர் பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா முடிவை எடுக்க உள்ளதாக
கூறப்படுகிறது. நேற்று இரவு லிபரல் கட்சி எம்பிக்களின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் கதவுகள் மூடப்பட்டு ரகசியமாக நடத்தப்பட்டது. இந்த மூடப்பட்ட அறையில் நடந்த கூட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று இந்த கருத்தை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் வணிகம் தொடர்பான பாலிமார்க்கெட் பிளாட்பார்ம் கூறுகையில், ‛‛ஜஸ்டின் ட்ரூடோ 80 சதவீதம் வரை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.
ஏனென்றால் தற்போது அவரது கட்சிக்குள்ளேயே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக குரல்கள் வலுக்க தொடங்கி உள்ளது'' என கூறியுள்ளது. அதேபோல் சி டிவி நியூஸ் சார்பி்ல, ‛‛ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது அல்லது நாடாளுமன்றத்தை கலைக்காமல் கூட்டத்தொடரை நடத்தாமல் ஒத்திவைக்கலாமா? என்பது பற்றி யோசித்து வருகிறார். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்று அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் ஜஸ்டின் ட்ரூடோவின் பிரதமர் அலுவலகம் அவரது ராஜினாமா குறித்த செய்திகளை முற்றிலுமாகமறுத்துள்ளது. அதோடு அது வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளது. கனடாவை பொறுத்தவரை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் முயற்சியில் தற்போது பதவியை ராஜினாமா செய்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் உள்ளார்.
இதுவும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. மேலும் கனடாவை பொறுத்தவரை லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் இடையே தான் போட்டி என்பது இருக்கும். தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிர்ரி பொய்லிரியும், ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளின்படி கன்சர்வேட்டிவ் கட்சி 20 புள்ளிகள் வரை ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியை விட முந்தியுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது கனடா ஜஸ்டின் ட்ரூடோவின் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறி வருகிறார். அதேபோல் டல்ஹவுசி பல்கலைக்கழக பேராசிரியர் லோரி டர்ன்புல் கூறுகையில், லிபரல் கட்சிக்கு தற்போது பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக தொடர்வது மிகவும் கடினமாக உள்ளது" என்று கூறியுள்ளார். கனடாவை பொறுத்தவரை பிரதமரின் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். கடந்த 2015, 2019 ஆண்டுகளை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஜஸ்ட்டின் ட்ரூடோ பிரதமராக செயல்பட்டு வருகிறார்.
கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 338 தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. தற்போது ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. இந்த கட்சி மொத்தம் 154 இடங்களில் வென்றது.
கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சிக்கு ஆட்சியை பிடிக்க 16 எம்பிக்களின் ஆதரவு என்பது தேவைப்பட்டது. இந்திய வம்சவாளியின் ஜம்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சி ஆதரவு வழங்கியது. இந்த கட்சியின் 24 எம்பிக்களின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டார். சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு வழங்கிய ஆதரவை இந்திய வம்சவாளவியின் ஜம்மீத் சிங்கின புதிய ஜனநாயக கட்சி அதனை வாபஸ் வாங்கியது. அதன்பிறகு பிற சிறிய கட்சிகளின் உதவியுடன் அவர் பிரதமராக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் மோதல் நீடிப்பது ஏன் என்று பார்த்தோமேயானால் அதற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவரின் கொலை தான் காரணம். அதாவது கனடாவில் சீக்கியர்கள் அதிகம் உள்ளனர். அதாவது வெளிநாடுகளில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் பிரிட்டன் உள்ள நிலையில் 2வது இடத்தில் கனடா இருக்கிறது. இங்கு சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வரை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 2.1 சதவீதம் பேர் சீக்கியர்களாக உள்ளனர்.
இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்து வருகிறார். வாக்கு வங்கி அடிப்படையில் ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதற்கிடையே தான் கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (சீக்கியர்) கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்தபடி இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை திட்டி வந்தார். இவர் மீது நம்நாட்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கொலை வழக்கு அங்கு பிரச்சனையான நிலையில் இந்தியா தான் ஏஜென்சி மூலம் கொலை செய்து இருக்கலாம்.
இது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் கூறினார். இதனை இந்தியா கடுமையாக கண்டித்தது. உண்மைக்கு புறம்பான தகவல்களை கூற வேண்டாம் என இந்தியா எச்சரித்தது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நம் நாட்டின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஜஸ்டின் ட்ரூடோவின் பிரதமர் பதவிக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது