நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆனது ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா
17 Dec,2024
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.
இந்த மசோதாவை தாக்கல் செய்ததும், இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, அரசியல் சாசனத்தில் சில அம்சங்களை மாற்றவே முடியாது என்றும், அமைச்சர் அறிமுகம் செய்த மசோதா அரசியல் அமைப்பின் அடிப்படையை மீறுவதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு மாநில சட்டப்பேரவைகளின் காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய சமாஜ்வாதி எம்.பி ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவதாக உள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கூறினார்.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சிக்கு எதிரானது. மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத போது இந்த மசோதாவை எப்படி அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே இந்த மசோதாவிற்கு எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்படும். நாடாளுமன்றம் கூட்டுக்குழுவில் விவாதம் நடத்தி, அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு,பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும்போதே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் கூறினார்.