காவி உடை அணியாதீர்கள், குங்குமம் வைக்காதீர்கள்.. வங்கதேச இந்துக்களுக்கு அறிவுரை
03 Dec,2024
பங்களாதேஷில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ், இந்து மதத்தை பின்பற்றும் பக்தர்களுக்கு ஒரு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளார். பொது இடங்களில் காவி நிற ஆடைகளையும் குங்கும திலகத்தையும் அணியாமல் இருக்க பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக,
தங்கள் வீடுகள் அல்லது கோயில் வளாகங்களில் சாமி கும்பிட்டுக்கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். "இந்துக்கள் மீது தாக்குதல்..வங்கதேச நோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது.. கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பு " ஷேக் ஹசினா அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, பங்களாதேஷில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ராதாராமன் தாஸ் தெரிவித்தார்.
இதனால் இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. பல துறவிகள் மற்றும் பக்தர்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ராதாராமன் தாஸ் கூறினார். பங்களாதேஷில் கோயில்கள் சேதப்படுத்தப்படுவதும், மத கூட்டங்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இது பங்களாதேஷில் இந்துக்களின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. "வங்கதேசத்தில் மீண்டும் பரபரப்பு.. அதிபரிடம் ராஜினாமா கோரி மாணவர்கள் போராட்டம்..
பின்னணியில் ஹசீனா " பங்களாதேஷ் சம்மிலித சனாதனி ஜாகிரன் ஜோட்டின் செய்தித் தொடர்பாளர் சின்மய கிருஷ்ணா கைது செய்யப்பட்ட சம்பவம், இந்துக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அவரது விடுதலை வேண்டி, வங்கதேசத்திலுள்ள இஸ்கான் கோவிலில் இந்துக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். கொல்கத்தா, நாக்பூர், டெல்லி, பெங்களூர் என நாடு முழுக்க இஸ்கான் சுவாமிஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடையாள கண்டன போராட்டங்களை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் மேற்கொண்டனர்.
1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் அடக்குமுறை, அவர்களின் மக்கள் தொகை விகிதத்தை வைத்து பார்க்கும்போதும் தெளிவாக தெரிகிறது. ஆனால் தற்போது அந்த அடக்குமுறை உச்சத்திற்கே போயுள்ளது.