சமீபத்தில், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து 53 ஆண்டுகளில் முதல் முறையாக சரக்குகளை ஏற்றிய கப்பல் ஒன்று வங்கதேசத்தின் மிகப்பெரிய துறைமுகமான சிட்டகாங் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மேம்படும் என்ற நம்பிக்கையை இது தந்துள்ளது என்றாலும், இந்தியாவின் கவலைகளையும் இது அதிகரித்துள்ளது.
1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே நடக்கும் முதல் கடல்வழி வர்த்தகம் இதுவாகும்.
இதுவரையில் வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தகம் எல்லாமே சிங்கப்பூர் மற்றும் இலங்கை வாயிலாகதான் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு இடையில் அதிகரித்திருக்கும் இந்த நெருக்கமான உறவு தொடர்பாக பல விவாதங்கள் தொடங்கியுள்ளன.
1971-ஆம் நடந்த விடுதலைப் போர் மற்றும் தனி சுதந்திர நாடாக வங்கதேசம் உருவாகியதன் பின்னர் பாகிஸ்தானுடனான உறவு கசப்பாகவே இருந்து வந்தது.
ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் செய்த மோசமான விஷயங்கள், வங்கதேசத்தினர் நெஞ்சில் ஆழமாக பதிந்துவிட்டன.
பாகிஸ்தான் ராணுவத்தால் கிட்டதட்ட முப்பது லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தப்பிக்க பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.
பாகிஸ்தான், இது வங்கதேச மக்களின் விடுதலை போராட்டம் இல்லை என்றும் முகமது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் திட்டத்தை உடைக்க இந்தியா செய்த சதி என்றும் வாதிட்டது.
மூத்த கொல்கத்தா பத்திரிகையாளர் புலகேஷ் கோஷ், சிட்டகாங் போன்ற வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல முறை சென்றுள்ளார்.
“பாகிஸ்தான் 1971-ஆம் ஆண்டு செய்த அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. வங்கதேசத்துடனான உறவை மேம்படுத்துவதில் இது மிகப்பெரிய தடையாக இருந்தது. மறுபுறம், ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்தபோது, 1971 போர் குற்றவாளிகளை தேர்ந்தெடுத்து தண்டித்தார். 2010 இல் இப்படிப்பட்டவர்களை தண்டிக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கி, பாகிஸ்தான் ஆதரவு ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்தார்” என்கிறார் புலகேஷ் கோஷ்
2013-ஆம் ஆண்டில், ஜமாத் தலைவர் அப்துல் காதர் மொல்லாவுக்கு போர்க் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கோஷ் கூறுகிறார்.
அப்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான், இது துரதிர்ஷ்டவசமானது என்றும், 1971ல் பாகிஸ்தானுக்கு விசுவாசம் மற்றும் ஆதரவை காட்டியதால்தான் அப்துல் காதர் தூக்கிலிடப்பட்டார் என்றும் கூறியதாக கோஷ் குறிப்பிட்டார்.
ஹசீனாவின் ஆட்சியின் போது, வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்றன.
1971-ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போரின் போது இந்தியா தனது பங்களிப்பின் காரணமாக பெரும்பாலான வங்கதேச மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்தது.
ஹசீனா நேரு-காந்தி குடும்பத்துடன் நெருங்கிய மற்றும் குடும்ப உறவுகளைக் கொண்டிருந்தார். 1975 ஆண்டு ஷேக் முஜிபுரின் படுகொலைக்கு பின், ஷேக் ஹசீனாவுக்கு டெல்லியில் புகலிடம் வழங்கப்பட்டது.
ஆனால் வங்கதேசத்தில் ஒரு பகுதியினருக்கு ஹசீனா இந்தியா உடன் நெருக்கம் காட்டுவது பிடிக்கவில்லை. இதுவே பின்னாளில் அங்கு இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு காரணமாக அமைந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம், டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாசார மையத்தை ஒரு கும்பல் சேதப்படுத்தி, தீ வைத்து எரித்தது. இது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இந்திய கலாசார நடவடிக்கைகளின் மையமாக இருந்தது.
வங்கதேசத்தில் கலவரங்கள் வெடித்து, ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, பாகிஸ்தானுக்கு ஆதரவான ஜமாத்-இ-இஸ்லாமி நாட்டில் மிகவும் வலுவாகியுள்ளது.
இந்த அமைப்பு 1971 இல் பாகிஸ்தானுடன் இருந்தது, தனி வங்கதேசத்திற்கு எதிராக இருந்தது.
கோஷ் கூறுகையில், "பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வங்கதேசத்தை நோக்கி நட்புக் கரம் நீட்ட இந்த சூழல் பொருத்தமானது. வங்கதேசத்தின் இடைக்கால அரசும் பாகிஸ்தானின் இந்த முயற்சிகளுக்கு சாதகமான அணுகுமுறையைக் காட்டியது.
'' இந்த ஆண்டு செப்டம்பரில், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபை தனியாக சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்புக்கு புத்துயிரூட்டுவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர்” என்றார் கோஷ்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கப்பட்டுள்ள நேரடி கடல்வழி வர்த்தகத்தால், குறிப்பாக இந்தியாவின் வட- கிழக்கு பகுதியின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் எழ வாய்ப்புகள் உள்ளது என்பதே இந்தியாவின் கவலைக்குக் காரணம். வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதி இந்தியாவின் வட கிழக்கு பகுதியை ஒட்டியுள்ளது
அரசியல் ஆய்வாளர் ஷிகா முகர்ஜீ கூறுகையில், “இப்பொழுது மொத்த வடக்கிழக்கும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு பிரச்னைகளை சமாளிக்க இந்தியா தவறிவிட்டது. மறுபுறம் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தபோது வங்கதேசம் அச்சுறுத்தல் இல்லாத இடமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஹசீனா இல்லை, வடக்கு கிழக்கில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது ” என்றார்.
''மணிப்பூர் பிரச்னை புற்றுநோயை போல உருவெடுத்துள்ளது. அதே சமயம் நாகாலாந்தில் இருக்கும் நிலைமை இதை விட ஆபத்தானது. தற்போது மீண்டும் தனி மாநிலம் கோரி இயக்கம் தொடங்கப்போவதாக நாகா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன'' என்கிறார் அவர்
மத்திய அரசின் கொள்கைகளால், வடகிழக்கில் பொருள்களுக்கான 'தேவை' உருவாகி வருவதாகவும், இதை பூர்த்தி செய்ய வங்கதேசத்திலிருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படலாம் என்றும் இது மிகவும் ஆபத்தானது என்றும் ஷிகா கூறுகிறார்.
இனி பாகிஸ்தானிய கப்பல்கள் நேரடியாக சிட்டகாங்கையே அடைய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமான ஆயுதங்களை கடல் வழியாக கொண்டு வரப்பட்டு கிளர்ச்சி குழுக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
“இதில் இந்தியா மற்றும் வங்கதேசம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகள் சோதனைக்குட்படுத்தப்படாது என்று அறிவித்திருந்தது. இப்படியான ஒரு சூழலில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போன்ற கொண்டு வரப்படலாம்” என்றார் ஷிகா முகர்ஜி.
இந்நிலையில், கடந்த 2004-ஆம் ஆண்டு சிட்டகாங் துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை ஷிகா முகர்ஜி குறிப்பிடுகிறார்
''2004 ஆம் ஆண்டு சிட்டகாங் துறைமுகத்தில் சட்டவிரோதமான ஆயுதங்கள் மிகப்பெரிய அளவில் கைப்பற்றப்பட்டது. இந்த சீன ஆயுதங்கள் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற ஆயுதக்குழுவுக்காக கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக கூறப்படுகிறது.” என்றார் அவர்.
“இந்த கடல்வழி தொடர்பால் வடகிழக்கு மீதான கவனம் மற்றும் கவலை அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் நிலவும் இந்த சூழல் பாகிஸ்தானிய செயல்பாடுகளை மேற்கொள்ள மிகவும் சாதகமாக உள்ளது
ஹசீனாவைப் போல இந்தியா உடனான சுமூகமான உறவு இனி நீடிக்காது என்று தெளிவாக புரிந்துவிட்டது. அதே சமயம் இது பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தி வருகிறது,” என்று கோஷ் கூறுகிறார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் இருந்தது போல வட கிழக்கு இனி பாதுகாப்பாக இருக்காது என கோஷ் கூறுகிறார்
சிட்டகாங் துறைமுகம் மிகவும் முக்கியமானது. வடகிழக்கு ஆயுதக்குழுக்களுக்கு தங்குமிடம் மற்றும் ஆயுதங்களை வழங்குவதில் பெயர் பெற்ற மியான்மரும் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. இது தவிர, வங்காள விரிகுடா வழியாக வடகிழக்கு இந்தியாவுக்கான நுழைவாயிலாகவும் இது செயல்படுகிறது.
“வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கடல்வழி தொடர்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய அரசியல் சிக்கலை உருவாக்குகிறது. முந்தைய காலத்தில் தீவிரவாதக் குழுக்கள் வங்கதேசம் வழியாகதான் இந்தியாவில் ஊடுருவினர். இது போன்ற அனுபவங்களால் இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தெரிகிறது.” என்றார் ஷிகா முகர்ஜி
“இரு நாடுகளுக்கிடையேயான இந்த நேரடி கடல் வர்த்தகம் நிச்சயமாக இங்குள்ள பகுதியில் புவிசார் அரசியலை பாதிக்கும்,” என்று கூறுகிறார் மேற்கு வங்கத்தில் வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல்துறை பேராசிரியராக இருந்த சுகோமல் சென்குப்தா
''ஆனால் இந்தியாவின் கவலை இதைவிட பெரியது. வடகிழக்கில் நிலவி வரும் சூழல் பதற்றம் நிறைந்ததாக உள்ளது. இந்த நிலையை பாகிஸ்தான் உளவுத் துறை தனக்கு சாதாகமாக மாற்றிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது'' என்கிறார் அவர்
பெயரை குறிப்பிட விரும்பாத ஷியாமா பிரசாத் முகர்ஜீ துறைமுக (முன்பு கொல்கத்தா துறைமுகம்) அதிகாரி ஒருவர், “இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அங்குள்ள அரசியலில் இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆபத்தை குறித்து அறிந்திருக்கும் அரசு இதன் மீது தீவிரமான கவனத்தை செலுத்தும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.