"குழந்தை பெறக் கொள்ளவே இந்திய பெண்கள் இங்கு வருகிறார்கள்.." கனடா இளைஞரால் வெடித்த சர்ச்சை!
17 Nov,2024
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வரும் நிலையில், கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் மீண்டும் சர்ச்சை கருத்தைக் கூறியிருக்கிறார். இந்தியப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும் கனடா வருவதாகவும் இதனால் கனடா நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் அவர் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இந்தியா- கனடா இடையே கடந்த சில காலமாகவே மோசமான உறவே நிலவி வருகிறது.
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ட்ரூடோ ஆதாரமின்றி கூறியதே மோதலுக்குக் காரணமாகும். சர்ச்சை: அதன் பிறகு இரு தரப்பிற்கும் மோதல் இருந்த நிலையில், தூதர்களைக் கூட இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டது. இதற்கிடையே கனடா நாட்டை சேர்ந்த சாட் ஈரோஸ் என்பவர் இந்தியப் பெண்கள் குறித்து சில சர்ச்சை கருத்துக்களைக் கூறி இருக்கிறார்.
அதாவது கருவுற்று இருக்கும் இந்தியப் பெண்கள் பிரசவத்திற்காகக் கனடாவுக்குச் செல்வதாக அவர் கூறியிருக்கிறார். கனடாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் அவர்கள், குடியுரிமை பெற இதைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அதன் பிறகு குடும்பத்தினரை மொத்தமாக அழைத்து வருவதாக ஈரோஸ் கூறியிருக்கிறார்..
பிரசவ வார்டுகள்: கனடாவில் உள்ள பிரசவ வார்டுகள் கனடா வந்த இந்தியப் பெண்களால் நிரம்பி இருப்பதாக ஒரு செவிலியர் தனது உறவினரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா நாட்டில் அனைவருக்கும் சமமான சிகிச்சை தரப்பட வேண்டும் என்றாலும் இந்தியப் பெண்கள் அதிக இடங்களை எடுத்துக் கொள்வது போல இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கனடா நாட்டில் உள்ள மகப்பேறு வார்டுகள் அனைத்தும் இந்தியப் பெண்களால் நிரம்பியுள்ளது என்று செவிலியர் ஒருவர் தெரிவித்தார். கனடா மருத்துவமனைகள் யாருக்கும் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பாது. இதன் காரணமாகவே வெளிநாட்டு இந்தியப் பெண்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வார்டுகள் இந்தியப் பெண்களால் நிரம்பி இருக்கிறது. என்ன லாபம்: அவர்கள் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் இதற்குப் பிரசவத்திற்கு பில் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் இதில் அவர்களுக்கு என்ன லாபம் எனக் கேட்கிறீர்களா.. கனடாவில் பிறப்பதால் அந்த குழந்தை கனடா குடியுரிமை பெறுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பிறகு கனடாவுக்கு வருகிறது. சீக்கிரமே பெற்றோர் உட்பட குடும்பத்தையே ஸ்பான்சர் செய்து கூட்டி வந்துவிடுகிறார்கள். கனடா நாட்டவர் கட்டும் வரியில் அதன் பிறகு அவர்கள் இங்கேயே இருந்துவிடுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்: இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவும் நிலையில், ஒரு சிலர் மட்டுமே அவர் சொல்வதை ஆதரித்துள்ளனர். இன்னும் சிலர், "இதுபோல நடப்பது அரசுக்கு தெரியாதா.. அரசு இதைச் சட்ட விரோதம் என அறிவிக்காத வரை எதுவும் சொல்ல முடியாது" என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியா மட்டுமின்றி ஆசிய நாட்டை சேர்ந்த பலரும் இதையே செய்வதாகக் கூறியிருக்கிறார். அதேநேரம் பலரும் அவரது கருத்தை விமர்சித்துள்ளனர். இந்தியர்களை மட்டும் குறிவைத்து ஆதாரமில்லாமல் இதுபோல சொல்வதை ஏற்க முடியாது எனப் பலரும் சாடிவருகின்றனர்.