11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை,இலங்கை நீதிமன்றம் உத்தரவு
12 Nov,2024
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் 15 பேரும் இன்று ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது 11 மீனவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, நான்கு மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்யவும் உத்தரவிட்டார். 11 மீனவர்கள் இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு தண்டனையும், நான்கு மீனவர்கள் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்த தகவல் அறிந்ததும் 11 மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், மீனவர்களை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் அதிகம் கைது செய்யப்பட்டு வருவதை அடுத்து, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.