19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
02 Nov,2024
உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.
உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 19 இந்திய நிறுவனங்கள் உட்பட சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.
வர்த்தகத்துறை தடை பட்டியலில் 40 நிறுவனங்கள் உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் மார்ச் 2023 முதல் மார்ச் 2024க்கு இடையில் ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனங்களுக்கு 700 ஏற்றுமதி தொகுப்புகள் அனுப்பியதாகவும் அதில் அமெரிக்க தயாரிப்பு விமான பாகங்கள் மற்றும் மைக்ரோ சிப்கள் உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் விவேக் குமார் மிஸ்ராஇ சூதர் குமார் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2023 முதல் 2024 வரை ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனத்திற்கு அமெரிக்க விமான உதிரி பாகங்கள் போன்ற மூன்று லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை வழங்கியதாக இந்தியாவை தலமாக கொண்ட மாஸ் டிரான்ஸ் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.